சின்ன ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சின்னஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சின்ன ஏரி, நகரின் முக்கிய நீராதாரமாக உள்ளது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு சையத்பாஷா மலை, சோமார்பேட்டை, பையனப்பள்ளி, ஜகினிகொல்லை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மழை நீரே ஆதாரமாகும். இந்த ஏரியில் தண்ணீர் தேங்கினால், நகரின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் தவிர்த்து பிற பயன்பாட்டிற்கு தேவையான தண்ணீர் பூர்த்தி ஆகிறது.

ஆழ்துளை கிணறுகளில் எப்போதும் தண்ணீர் இருக்கும். இந்நிலையில், இந்த ஏரிக்கு வரும் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பால் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் வரத்து முற்றிலும் தடைபட்டது. இதையடுத்து ஒளிரும் கிருஷ்ணகிரி பவுண்டேசன் அமைப்பினர், ஏரிக்கு வரும் வழித்தட ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் அகற்றி, தண்ணீரை கொண்டு வந்தனர்.

தற்போது போதிய மழை பெய்யாததால் இந்த ஏரியில் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே தேங்கியுள்ளது. அதிலும், ஆகாய தாமரைகள் வளர்ந்துள்ளதால், நீரும் மாசடைந்து வருகிறது. மேலும், ஏரிக்கரையில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள், ஆகாய தாமரைகளை அகற்றி, கோழி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: