எம்எல்ஏ சொந்த செலவில் 100 கட்டில், மெத்தை வழங்கல் பேராவூரணி அரசு கல்லூரியில் கொரோனா தொற்றாளர் தனிமைப்படுத்துதல் மையம்-சப்.கலெக்டர் ஆய்வு

சேதுபாவாசத்திரம் : பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனிமைப்படுத்துதல் மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இங்கு 100 படுக்கை வசதிகளுடன் பேராவூரணி பகுதியில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இன்னும் ஒரிரு தினங்களில் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், சப்.கலெக்டர் கலந்து கொண்டு திறந்து வைக்க உள்ளனர்.

இந்நிலையில் கலை அறிவியில் கல்லூரி பேரூராட்சி பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் தனது சொந்த பணத்தில் இருந்து 100 இரும்பு கட்டில், மெத்தை, தலையணை, படுக்கை விரிப்பு, போர்வை என ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் தளவாட பொருட்களை அரசு கல்லூரியில் அமைய உள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு வழங்கியுள்ளார். அதனை எம்எல்ஏ அசோக்குமார் முன்னிலையில், சப்.கலெக்டர் பாலச்சந்தர் ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகள் பணி மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு உணவு வழங்கும் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொள்வதாக எம்எல்ஏ அசோக்குமார் தெரிவித்தார். ஆய்வின் போது பேராவூரணி தாசில்தார் ஜெயலட்சுமி, வட்டார மருத்துவ அலுவலர்கள் சவுந்தர்ராஜன் (பேராவூரணி), ராமலிங்கம் (சேதுபாவாசத்திரம்), டாக்டர் வெங்கடேசன், பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன், வட்டார சுகாதார மேற்பார்வையளர் சந்திரசேகரன், மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories: