கொரோனாவால் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை இல்லை 2000 நோட்டு புழக்கம் 2 சதவீதமாக சரிந்தது: ரிசர்வ் வங்கி தகவல்

மும்பை: கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, பழைய 500 மற்றும் 1,000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டன. இதன்பிறகு 2,000, 200 மற்றும் புதிய 500 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிட்டது. இவற்றில் உயர் மதிப்பிலான 2,000 நோட்டு மீண்டும் கருப்பு பண பதுக்கலுக்கே வழி வகுக்கும் என விமர்சனங்கள் எழுந்தன.  கடந்த 2020-21 நிதியாண்டில் 245 கோடி 2,000 நோட்டு புழக்கத்தில் இருந்தன. இதற்கு முந்தைய ஆண்டில் 273.98 கோடி நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. மதிப்பு அடிப்படையில் கடந்த 2020 மார்ச் மாதம் 5.48 லட்சம் கோடியாக இருந்த 2,000 நோட்டு புழக்கம், மார்ச் 2021ம் ஆண்டில் 4.9 லட்சம் கோடியாக சரிந்து விட்டது.    500 நோட்டு புழக்கம் 31.1 சதவீதமாக  உயர்ந்துள்ளது. இது கடந்த 2020 மார்ச்சில் 25.4 சதவீதமாகவும், 2018-19 நிதியாண்டில் 19.8 சதவீதமாகவும் இருந்தது. புழக்கத்தில் உள்ள 500 நோட்டு எண்ணிக்கை 3,867.9 கோடி. மதிப்பு அடிப்படையில், இது 19.34 லட்சம் கோடியாக உள்ளது.

2019-20 நிதியாண்டில் 500 நோட்டு புழக்கம் 14.72 லட்சம் கோடியாக இருந்தது. புழக்கத்தில் உள்ள பணத்தில் 500 நோட்டின் பங்களிப்பு கடந்த ஆண்டு இருந்த 60.8 சதவீதத்தில் இருந்து 68.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுபோல் 200 நோட்டு புழக்கம் 4.6 சதவீதத்தில் இருந்து 4.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. 10 நோட்டு புழக்கம் 26.2 சதவீதத்தில் இருந்து  23.6 சதவீதமாகியுள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் 12,436.71 கோடியாகவும், மதிப்பு அடிப்படையில் 28.27 லட்சம் கோடியாகவும் உள்ளது. அதேநேரத்தில், கள்ளநோட்டு 30 சதவீதம் சரிந்து 2.09 லட்சமாக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை பொறுத்தவரை, முதல் அலையை அளவுக்கு 2வது அலையில் பெரிய பாதிப்பு அடையவில்லை. இருப்பினும், பொருளாதாரம் ஸ்திரத்தன்மையற்ற நிலையிலேயே காணப்படுவதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

Related Stories: