தமிழகத்திற்கு தேவையான உதவிகள் விரைவில் வந்து சேரும்: அமெரிக்க ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் ஜெஸ்ஸி ஜாக்சன்

வாஷிங்டன்: அமெரிக்காவிலிருந்து விரைவில் தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசிகள் வந்து சேரும் என்று ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் ஜெஸ்ஸி ஜாக்சன் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின் படி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சர்வதேச நாடுகளிடம் இருந்து உதவிகளை பெற்றுவருகிறார்.

இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவை சார்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் ஜெஸ்ஸி ஜாக்சன் வாயிலாக அங்கு கூடுதலாக இருப்பில் உள்ள 8 கோடி ASTRA ZENECA தடுப்பூசிகளை இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் கிடைக்க செய்ய பழனிவேல் தியாகராஜன் முயற்சி மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக காணொளி வாயிலாக நடந்த உரையாடலில் பேசிய ஜெஸ்ஸி ஜாக்சன் தமிழகத்திற்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க பைடன் நிர்வாகத்துடன் தனிப்பட்ட முறையில் பேசிவருவதாகவும், ASTRAZENECA மற்றும் ஜான்சனன் ஜான்சன் நிறுவனங்களுடன் பேசவுள்ளதாகவும் பழனிவேல் தியாகராஜனிடம் தெரிவித்தார்.

பின்னர் மு.க.ஸ்டாலினை சிறந்த தலைவர் என பாராட்டிய அவர் தமிழகத்திற்கு தேவையான உதவிகள் விரைவில் வந்து சேரும் என்றார். இந்தியாவில் நீதி கட்சியும், திராவிட இயக்கங்களும்  சமூக நீதிக்காக போராடி கொண்டிருந்த அதே காலகட்டத்தில் அமெரிக்காவில் மார்டின் லூதர் கிங்குடன் இணைந்து கறுப்பின மக்கள் உரிமைகளுக்கான  போராடியவர் ஜெஸ்ஸி ஜாக்சன்.

 தற்போது அமெரிக்க அதிபர் பைடன் மதிக்ககூடிய ஒரு தலைவராக ஆளும் கட்சியில் உள்ளார். அவரின் மூலம் தமிழகத்தின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவிகள் கிடைக்க உள்ளது. அவருடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நடத்திய காணொளி உரையாடலில் அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினரும், தமிழருமான ராஜாகிருஷ்ணமூர்த்தியும் கலந்து கொண்டார்.

Related Stories: