ஏ. ராஜா ஆகிய நான்!: கேரள சட்டமன்றத்தில் தாய் மொழியான தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்ற எம்.எல்.ஏ...பலரும் வியப்பு..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் தேவி குளம் தொகுதி எம்.எல்.ஏ.-வான ராஜா தனது தாய் மொழியான தமிழில் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டுள்ளார். வழக்கறிஞரான ராஜா, கேரளாவில் ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  தேவி குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில் இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட அவர், தனது தாய் மொழியான தமிழில் உறுதிமொழி கூறினார். கேரள சட்டமன்றத்தில் தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றத்திற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோன்று பல்வேறு தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் அவர் சிறப்பாக பணியாற்ற வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

கேரளாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ளது பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கேரளாவின் 15ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம், தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வுடன் இன்று தொடங்கியது. அப்போது நடந்து முடிந்த தேர்தலில், இடுக்கி மாவட்டத்தின் தேவிகுளம் தொகுதியிலிருந்து போட்டியிட்டு 51 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்ற ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தமிழரான ராஜாவும் பதவியேற்றுக் கொண்டார். கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்து, இன்று நடைபெற்ற நடப்பு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் பதவியேற்ற ராஜா தமிழ் மொழியில் பதவியேற்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: