ஆற்காடு, சிப்காட் வாரச்சந்தையில் காய்கறிகள் வாங்க குவிந்த பொதுமக்கள்-திடீர் விலை உயர்வால் கடும் அதிர்ச்சி

ராணிப்பேட்டை : ஆற்காடு, சிப்காட் வாரச்சந்தையில் சமூக இடைவெளியின்றி காய்கறி வாங்க பொதுமக்கள் நேற்று குவிந்தனர். காய்கறி விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.தமிழகத்தில் கொரோனா தொற்று  வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டுள்ளது. மேலும் இன்று முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லாத  முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  அத்தியாவசிய பொருட்கள் விற்பனை  செய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்று  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்து முற்றிலும் தடை  செய்யப்பட்டுள்ளது.  முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால்  நேற்று மற்றும்  நேற்று முன்தினம் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிப்காட் வாரச்சந்தையில் ஒரு வார காலத்துக்கு தேவையான காய்கறிகள் உள்ளிட்ட   வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் நேற்று சமூக  இடைவெளியின்றி அதிக அளவில் குவிந்தனர்.

அப்போது, காய்கறிகள் விலை உயர்த்தி விற்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், பொதுமக்கள் காய்கறி வாங்க சமூக இடைவெளியின்றி குவிந்ததால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ராணிப்பேட்டையில் இறைச்சி வாங்க அசைவ பிரியர்கள் குவிந்தனர். அதேபோல், ஆற்காட்டில் அசைவப்  பிரியர்கள் இறைச்சி, மீன் ஆகியவற்றை வாங்குவதற்காக அதிகளவு குவிந்தனர்.

ஏற்கனவே கிலோ ₹140 மற்றும் ₹160க்கு விற்றகோழி இறைச்சி ₹180க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் மீன்களும் அதிக அளவு விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ஒரு கிலோ ₹10க்கு விற்ற தக்காளி நேற்று ₹20க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ₹20க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் ₹40க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் முருங்கைக்காய், பீன்ஸ், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, கொத்தமல்லி உள்ளிட்ட அனைத்து காய்கறி பொருட்களும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். தளர்வில்லாத முழு ஊரடங்கை பயன்படுத்தி வியாபாரிகள் காய்கறி விலையை இரண்டு மடங்காக உயர்த்தி விற்றதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். பேரிடர் காலத்தில் இப்படி விலையேற்றம் செய்வது தவறு என்று பொதுமக்கள் கேட்டபோது காய்கறி  வரத்து இல்லாததால் பொருட்கள் விலை அதிகரித்து விட்டதாக வியாபாரிகள் கூறி பொதுமக்களை சமாதானம் செய்தனர்.

Related Stories: