அடிக்கல் நாட்டி ஒரு வருடம் ஆகியும் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி அலுவலகம் கட்டும் பணியை துவங்குவதில் தாமதம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

உளுந்தூர்பேட்டை : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகம் சென்னை ரோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் எதிரில் இயங்கி வந்தது. இந்த அலுவலகம் கட்டப்பட்டு 35 ஆண்டுகளுக்கும் மேல் ஆனதால் கடந்த அதிமுக ஆட்சியில் புதிய பேரூராட்சி அலுவலகம் கட்டுவதற்காக ரூ.1 கோடியே 85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பூமி பூஜையும் நடைபெற்றது. இதனால் இந்த இடத்தில் இயங்கி வந்த பேரூராட்சி அலுவலகம் தற்காலிகமாக பாண்டூர் ரோட்டில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான இடத்திற்கு மாற்றப்பட்டு அங்கு இயங்கி வருகிறது.

இந்நிலையில் பூமி பூஜை நடைபெற்ற பிறகு பழைய கட்டிடத்தை இடிக்கும் பணிகள் 3 மாதங்கள் நடைபெற்றது. இதன் பிறகு ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் இதுவரையில் எந்தவித அடிப்படை பணிகளும் நடைபெறவில்லை. புதிய அலுவலகம் கட்டும் பணி நடைபெறாததால் குறுகிய இடத்தில் தற்போது பேரூராட்சி அலுவலகம் இயங்கி வருவதால் ஊழியர்கள் கடும் சிரமத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து புதிய பேரூராட்சி அலுவலக கட்டுமான பணிகளை விரைந்து துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: