ஊரடங்கை மீறி காய்கறி விற்ற சிறுவன் மரணம்; 2 போலீஸ்காரர், ஹோம்கார்டு காவலர் மீது கொலை வழக்கு: பிரேத அறிக்கையில் தலை, உடலில் 14 இடத்தில் காயம்

உன்னாவ்: உத்தரபிரதேசத்தில் ஊரடங்கை மீறி காய்கறி விற்ற 17 வயது சிறுவனை போலீசார் தாக்கிய இறந்த விவகாரத்தில், தொடர்புடைய 2 ேபாலீஸ்காரர் மற்றும் ஊர்காவல்படை காவலர் மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் அடுத்த பங்கார்மா பகுதியில் 17 வயது சிறுவன் தனது வீட்டிற்கு வெளியே காய்கறிகளை விற்பனை செய்து கொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக சென்ற போலீஸ்காரர் ஒருவர், அந்த சிறுவனிடம் கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறியதாக கூறி, தனது கையில் வைத்திருந்த லத்தியால் தாக்கினார். பின்னர், அந்த சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.

அங்கு சிறுவன் மீண்டும் தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அந்த சிறுவன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அந்த சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால் கோபமடைந்த உள்ளூர் மக்கள் லக்னோ சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். போலீஸ் அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இவ்விவகாரம் தொடர்பாக, ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் விஜய் சோதுரி, சீமாவாட் ஆகியோர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் ரோந்து பணியில் இருந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த சத்யபிரகாஷ் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து உன்னாவ் போலீஸ் ஏஎஸ்பி சசி சேகர் கூறுகையில், ‘காய்கறி விற்பனையாளரான 17 வயதான சிறுவனின் சடலத்தை இரண்டு மருத்துவர்கள் குழு பிரேத பரிசோதனை நடத்தியது. சிறுவனின் தலை மற்றும் உடலில் 14 இடங்களில் காயம் இருந்தது. காவல்துறையினரால் தாக்கப்பட்டு சிறுவன் இறந்துள்ளான். குற்றம் சாட்டப்பட்ட ஊர்காவல்படை காவலர் விஜய் சவுத்ரி, போலீஸ்காரர்கள் சத்ய பிரகாஷ், சீமாவாட் ஆகியோர் மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி மற்றும் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்’ என்றார்.

Related Stories: