அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்சில் திடீர் தீ: கொரோனா நோயாளி பத்திரமாக மீட்பு

கோவை: கோவை அரசு மருத்துவமனை வளாத்தில் ஆம்புலன்சில் திடீரென தீ பிடித்தது. சமயோஜிதமாக செயல்பட்டதால் கொரோனா நோயாளி பத்திரமாக மீட்கப்பட்டார். கோவை வரதராஜபுரத்தில் 57 வயது பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் மூச்சுவிட முடியாமல் உடல் நலம் மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து, அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு நேற்று  காலையில் கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு ஆக்சிஜன் படுக்கை இல்லை என கூறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

இதையடுத்து, ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜனை பயன்படுத்தி கோவை அரசு மருத்துவமனைக்கு நேற்று காலை 7.50 மணிக்கு கொண்டு வந்தனர். கொரோனா சிகிச்சை பிரிவு அருகே ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. படுக்கை கிடைக்காததால்  ஆம்புலன்சில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்தனர். அப்போது, ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்று தீர்ந்தது. உடனே, 2வது சிலிண்டர் உதவியுடன் ஆக்சிஜன் வழங்கப்பட்டது. திடீரென ஆம்புலன்சில் தீ விபத்து ஏற்பட்டது.  உடனடியாக ஆம்புலன்ஸ் ஊழியர் தங்கபாலு (29) வாகனத்தில் இருந்த நோயாளியை  வெளியே இறக்கி வார்டுக்கு கொண்டு சென்றார். அதற்குள் ஆம்புலன்சில் தீ வேகமாக பிடித்தது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல்  அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை தண்ணீர் பீய்ச்சியடித்து அணைத்தனர். இந்த சம்பவம் காரணமாக சுமார் 3 மணி நேரம் கொரோனா சிகிச்சை பிரிவில் பணிகள் பாதிக்கப்பட்டது. ஆக்சிஜன் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு  காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

Related Stories: