கொரோனாவை குணமாக்கும் என கூறியபடிலேகியம் சாப்பிட்டவருக்கு ஆக்சிஜன் அளவு குறைந்தது: நெல்லூர் மருத்துவமனையில் அவசரமாக அனுமதி

திருமலை: ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கிருஷ்ணபட்டினம் அடுத்த முத்துக்கூறு  கிராமத்தில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றவர் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டதால், ஆயுர்வேத லேகியம்  விவகாரம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கிருஷ்ணபட்டினம் அடுத்த முத்துக்கூறு  கிராமத்தில் ஆனந்தய்யா என்பவர், பல்வேறு மூலிகை பொருட்களை கொண்டு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லாதவர்களுக்கும், பாதிப்பு  ஏற்பட்டவர்களுக்கும், ஆக்சிஜன் உதவியுடன் வெண்டிலேட்டர் சிகிச்சை பெறுபவர்களுக்கும் ஆறு விதமான மூலிகைகளை கொண்டு லேகியம் வழங்கி வந்தார்.

இந்த லேகியத்தை பெறுவதற்காக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் குவிந்தனர். இதனால், திருவிழா போல் கூட்டம் கூடியதால், அரசு அதிகாரிகள் லேகியத்தை பெற்று ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் தகவலறிந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, லேகியத்தின் செயல் பாடுகள் மற்றும் பக்க விளைவுகள் உள்ளதா என்பது குறித்து விசாரணைக்காக உத்தரவிட்டார். இதனால் ஒரு வாரத்திற்கு மருந்து வழங்குவது நிறுத்தி  வைக்கப்பட்டது. இதற்கிடையே நெல்லூர் மாவட்டம், தோட்டா மண்டலத்தை சேர்ந்த முன்னாள் தலைமை ஆசிரியர் கொண்டய்யா, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 5 நாட்களாக ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று  வந்தார்.

மேலும், இனி உயிர் பிழைக்க முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்ததால், அங்கிருந்து ஆனந்தய்யாவின் ஆயுர்வேத  லேகியம் வழங்கும் மையத்திற்கு வந்தார்.  அங்கு ஆனந்தய்யா நேற்று முன்தினம் கொண்டய்யாவின்  கண்களில்  இரண்டு சொட்டு ஆயுர்வேத மருந்தை ஊற்றினார். மருந்து செலுத்திய பத்து நிமிடங்களிலேயே கொண்டய்யா செயற்கை சுவாசம், தேவையில்லாமல்  சாதாரண நிலைமைக்கு வந்தார். இதையடுத்து கொண்டய்யா நிருபர்களிடம் பேட்டி அளித்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.  இந்நிலையில் நேற்று திடீரென கொண்டய்யாவின் ஆக்சிஜன் அளவு 70க்கும் கீழ் குறைந்ததால், உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு, நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஆனந்தய்யாவின் ஆயுர்வேத லேகியத்தை உட்கொண்டவர்கள், கண்களில் சொட்டு மருந்து விட்டவர்களில் யார் யாருக்கு மீண்டும் பழையபடி ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளது என்பது குறித்து மாநில அரசு விசாரணை  மேற்கொண்டுள்ளது.

ஒருபுறம் ஆனந்தய்யா வழங்கி வந்த ஆயுர்வேதம் மருந்து குறித்து ஆயுஷ் அமைச்சகம் ஐசிஎம்ஆர்  ஆய்வு செய்து வரக்கூடிய நிலையில், மறுபுறம் ஆனந்தய்யா வழங்கிய மருந்தால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்கள்  குணமடைந்து, மீண்டும் வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதால், கொரோனா ஆயுர்வேத லேகியம் விவகாரம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை

ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒரு புறம்  ஆயுர்வேத மருந்து வழங்கக்கூடிய விவகாரத்தில் அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தி ஆய்வறிக்கையை வந்த பிறகு வழங்கப்படும் என கூறி  லேகியம் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால், ஆளுங்கட்சியை சேர்ந்த உள்ளூர் எம்எல்ஏ நாட்டு மருந்து  வழங்குவதாக அறிவித்து அதனை தொடங்கி வைத்தார். அதனால் அங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடினர். மேலும்,  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களும், அங்கு கூடினர். இந்த அரசின் நிலையற்ற தன்மை கொண்ட முடிவால் பொதுமக்கள் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: