திருவெறும்பூரில் ம.நீ.ம. கூண்டோடு காலி சர்வாதிகாரியை போல செயல்படுகிறார் கமல்: ராஜினாமா செய்த பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு

திருச்சி: திருச்சி, திருவெறும்பூரில் ம.நீ.ம. கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகினர். கமல் சர்வாதிகாரி போல செயல்படுகிறார், தேர்தல் தோல்விக்கு அவர் மட்டுமே காரணம் என்று கூறி கட்சியில் இருந்து மாநில பொது செயலாளர் முருகானந்தம் ராஜினாமா செய்துள்ளார். திருச்சி திருவெறும்பூர் குமரேசபுரத்தை சேர்ந்தவர் முருகானந்தம். மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகளின் மாநில பொதுச்செயலாளராக இருந்த இவர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். இந்நிலையில் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகுவதாக ராஜினாமா கடிதத்தை மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு முருகானந்தம் அனுப்பினார். இவருடன் சேர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வீரசக்தி, கிளை செயலாளர்கள் 200 பேர், 2,200 கிளை செயற்குழு உறுப்பினர்கள் கட்சியில் இருந்து கூண்டோடு விலகுவதாக தெரிவித்தனர்.

இது குறித்து முருகானந்தம் திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: கடந்த சில மாதங்களாக கட்சியில் ஜனநாயகம் முற்றிலும் அற்றுப்போய் விட்டது. இது ‘நமது கட்சி’ என்று என்னை போன்ற நிர்வாகிகள் கூறி உழைத்துக் கொண்டிருந்த நிலையில், இல்லை இது ‘என் கட்சி’ என்ற தோரணையில் கமல்ஹாசன் சமீபத்தில் நடந்து முடிந்த உயர்மட்ட நிர்வாக குழு கூட்டத்தில் கூறினார். பல முடிவுகளிலும் தன்னிச்சையாக செயல்பட்டதன் மூலம் கட்சிக்குள் சர்வாதிகாரம் தலை தூக்கி ஜனநாயகம் காணாமல் போய் விட்டது. தோல்விக்கு முழு காரணம் கமல்ஹாசன் மட்டுமே என்றார்.

Related Stories: