படுக்கை..ஆக்சிஜன் சிலிண்டர்..மருந்துகள்!: அனைத்து வசதி உள்ள கொரோனா சிகிச்சை வார்டானது பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி இல்லம்..!!

பாட்னா: பீகாரில் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தமக்கு ஒதுக்கப்பட்ட அரசு இல்லத்தை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தேஜஸ்வி யாதவ், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமலும், ஆக்சிஜன் கிடைக்காமலும் அவதிபடுவதால் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் கொண்டதாக பாட்னாவில் உள்ள தமது அரசு இல்லத்தை மாற்றியிருப்பதாக தெரிவித்திருக்கிறார். 

எனவே அரசு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தமது இல்லத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். பாட்னாவில் என் 1 போலோ சாலையில் உள்ள தமது அரசு இல்லத்தில் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகள் ஆகியவற்றை நிறுவி, கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை மையமாக மாற்றியுள்ளார். இதனை வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவு செய்துள்ள தேஜஸ்வி யாதவ், தமது ட்விட்டர் பக்கத்தில் அவற்றை வெளியிட்டுள்ளார். இதேபோன்று கர்நாடக உள்துறை அமைச்சர் தமது அரசு இல்லத்தை கொரோனா வார்டனாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து தேஜஸ்வி யாதவ் தெரிவித்ததாவது, அரசு மருத்துவமனையில் படுக்கைகள், ஆக்சிஜன், மருந்துகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, எனது இல்லத்தை அனைத்து வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியுள்ளேன். அரசு, இதனை ஏற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் என எதிர்பார்க்கிறேன். இங்கு படுக்கைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருந்துகள் அனைத்து வசதிகளும் நிறுவப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டிருந்தார்.

Related Stories: