அணைக்கட்டு அருகே ஆச்சரியம்: கொரோனா தொற்று இல்லாத 3 மலை கிராமங்கள்: நோய் எதிர்ப்பு சக்தியே காரணம்

அணைக்கட்டு: அணைக்கட்டு அருகே கொரோனா நோய்த்தொற்று இல்லாத 3 மலை கிராமங்கள், அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.  வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்தில் பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லை ஆகிய 3 மலை ஊராட்சிகள் உள்ளன. இங்கு 70க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து  வருகின்றனர். இவர்கள் விவசாயம், கூலி வேலை, கால்நடை வளர்ப்பு, நூறுநாள் வேலை, விறகு வெட்டுதல், தேன் எடுத்தல், வெளி மாநிலங்களில் தங்கி எஸ்டேட்டுகளில் வேலை செய்தல் போன்ற வேலைகளை செய்து வருகின்றனர்.

அணைக்கட்டு தாலுகாவில் தினமும் சுமார் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லை ஆகிய மலை கிராமங்களில் ஒருவருக்குகூட கொரோனா நோய்த்தொற்று இல்லை. கடந்த  ஒரு மாதத்திற்கு முன்பு ஜார்தான்கொல்லை ஊராட்சியை சேர்ந்த மாணவி ஒருவர் திருவண்ணாமலையில் தங்கி படித்தபோது, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தார். இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை  செய்ததில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது தெரியவந்தது.

மேலும், இந்த மலைவாழ் மக்கள் அனாவசியமாக மலைக்கு கீழே உள்ள கிராமங்களுக்கு வருவதில்லை. வாரம் ஒருமுறை காய்கறி சந்தைக்கு மட்டும் வந்து செல்கின்றனர்.  கொரோனா தொற்று காரணமாக வாரச்சந்தைகள் இயங்க தடைவிதிக்கப்பட்டதால் ஒடுகத்தூர் பகுதிக்கும் வருவதில்லை. கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இல்லாததாலேயே மலைவாழ் மக்கள் யாருக்கும் கொரோனா தொற்று  ஏற்படாமல் உள்ளது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஒடுகத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் கைலாசம் கூறுகையில், ‘‘மலையில் வசிப்பவர்கள் பெரும்பாலும் மாசற்ற, சுத்தமான காற்றை சுவாசிக்கின்றனர்.

செயற்கை உரங்களை தவிர்த்து இயற்கையாக விளையக்கூடிய  பொருட்களையே சாப்பிடுகின்றனர். இதனால் இயல்பாகவே அவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். மலையில்  யாருக்காவது தொற்று ஏற்பட்டாலும் மேற்கொண்டு பரவ வாய்ப்பு குறைவு. கடந்தாண்டு கொரோனா ஊரடங்கின்போது வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய, இந்த மலை கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் யாருக்கும் தொற்று இல்லை.  தற்போது, கொரோனா தொற்று வேகம் எடுத்து வரும் நிலையில், மலைவாழ் மக்கள் விரும்பினால், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்’’ என்றார்.

Related Stories: