தடுப்பூசி நெருக்கடிக்கு மத்தியில் லண்டனில் முகாம்; நான் நாட்டை விட்டு வெளியேறவில்லை!.. ஆதார் பூனாவாலாவின் தந்தை சைரஸ் பேட்டி

புனே: கொரோனா தடுப்பூசி நெருக்கடிக்கு மத்தியில் ஆதார் பூனாவாலா லண்டனில் முகாமிட்டுள்ள நிலையில், அவரது தந்தையும் தற்போது லண்டன் சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனமானது  பூனாவாலா குழுமத்திற்கு சொந்தமானது. உலகப் புகழ்பெற்ற இந்நிறுவனம், தற்போது ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராசெனிகா நிறுனங்களுடன் இணைந்து உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா கடந்த சில வாரங்களுக்கு முன், லண்டனுக்கு  குடும்பத்துடன் சென்றார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘தடுப்பூசி சப்ளை செய்யும் விஷயத்தில் சில  சக்திவாய்ந்த நபர்கள் மற்றும் தலைவர்களிடமிருந்து எனக்கு அச்சுறுத்தல்கள்  வருகிறது. எவ்வித காரணமும் இல்லாமல் என்மீது  அவதூறு கருத்துகள்  கூறப்படுகின்றன’ என்று தெரிவித்தார். அதையடுத்து, அவருக்கு மத்திய  பாதுகாப்பு படையின் உயர்பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மே  3ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ‘ஒரே இரவில் தடுப்பூசியின் உற்பத்தியை  அதிகரிக்க முடியாது. சீரம் நிறுவனம் உற்பத்தி திறனை அதிகரிக்க கடுமையாக  உழைத்து வருகிறது. லண்டனில் நீண்ட காலம் தங்குவதற்கான எந்த திட்டமும் இல்லை.

சில நாட்களில் இந்தியா திரும்புவேன்’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஆதாரின் தந்தை சைரஸ் பூனாவாலாவும் லண்டன் சென்றுள்ளார். அதனால், ஆதார் பூனாவாலாவின் மொத்த குடும்பமும் லண்டனில் முகாமிட்டுள்ளது. இதுகுறித்து சைரஸ் பூனாவாலா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்காக மே மாதத்தில் லண்டனுக்குச் செல்வேன். அதன்படி, இந்தாண்டும் செல்கிறேன். நெருக்கடி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறப்படுவதை மறுக்கிறேன். கோடைகாலத்தை விடுமுறையில் செலவிட விரும்புகிறேன்.

இது ஒன்றும் புதிதல்ல’ என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆதார் பூனாவாலா லண்டனுக்கு சென்று ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில், அவரது தந்தையும் சென்றுள்ளதால் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Related Stories: