எஸ்.ஐ.ஆர் சர்ச்சை தெருவில் இறங்கி மம்தா போராட்டம்

மேற்கு வங்கத்தில் கடந்த மாதம் 28ம் தேதி வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, சிறப்பு தீவிர திருத்த செயல்முறை கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கியதில் இருந்து சுமார் 8.3 சதவீத வாக்காளர்கள் அதாவது 63.66லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதனால் வாக்காளர் எண்ணிக்கை சுமார் 7.66 கோடியில் இருந்து 7.04 கோடியாக குறைந்துள்ளது.

கூடுதலாக 60 லட்சம் வாக்காளர்களின் தகுதி வரும் வாரங்களில் சட்ட ஆய்வு மூலமாக தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பின் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் தன்னிச்சையாக வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மத்திய கொல்கத்தாவில் உள்ள எஸ்பிளனேட் மெட்ரோ சேனலில் இந்த போராட்டம் நடைபெற்றது.

முதல்வர் ஆவதற்கு முன் இதே எஸ்பிளனேட் பகுதியில மம்தா நடத்திய அதிரடி போராட்டங்கள், அப்போதைய இடதுசாரி அரசை அசைத்து பார்த்தது. இந்த முறை, தேர்தல் ஆணையம், ஒன்றிய அரசை எதிர்த்து போராட்ட களத்தில் குதித்துள்ளார். முதல்வர் ஆன பிறகு தெருவில் இறங்கி மம்தா நடத்தும் 2வது போராட்டம் இது. கடந்த 2019ல் அப்போதைய கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனரை சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் விசாரிக்க சிபிஐ முயற்சித்ததை கண்டித்து இதே போல் மம்தா போராட்டம் நடத்தியுள்ளார்.

Related Stories: