கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலபுலிவார்டு ரோட்டுக்கு மாற்றம்; புதிய இடத்தில் காந்தி மார்க்கெட்: நாளை முதல் மூடப்படும் என வியாபாரிகள் அறிவிப்பால் காய்கறிகள் விலை உயரும் அபாயம்

திருச்சி: திருச்சியில் கொரோனா பரவலை தடுக்க காந்தி மார்க்கெட் இன்று முதல் மேலப்புலிவார்டு ரோட்டில் இயங்கியது. கடந்த 2 நாட்களாக கடைகள் இல்லாததால் காய்கறிகள் வாங்க அதிகளவில் மக்கள் குவிந்தனர். இந்த இடமும் பிடிக்காததால் நாளை முதல் மார்க்ெகட் மூடப்படும் என வியாபாரிகள் அறிவித்துள்ளதால் காய்கறிகள் பல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கொரோனா 2ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் 1569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 1600ஐ நெருங்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மக்கள் அதிகம் கூடும் திருச்சி காந்தி மார்க்கெட் காய்கறி விற்பனையை பொன்மலையில் உள்ள ஜீ கார்னருக்கு மாவட்ட நிர்வாகம் இடமாற்றம் செய்தது. ஆனால் வியாபாரிகள் அங்கு அடிப்படை வசதிகள் இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி அங்கு செல்ல மறுத்து விட்டனர். இதையடுத்து காந்தி மார்க்கெட்டிலே இரவில் மொத்த வியாபாரமும், பகலில் சில்லரை வியாபாரமும் நடைபெற்றது. தொடர்ந்து மார்க்கெட்டில் ஊரடங்கு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. இதனால் காந்திமார்க்கெட்டில் காய்கறி மொத்த வியாபாரத்தை இடமாற்றம் செய்வதில் தொடர் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் காந்திமார்க்கெட் இடமாற்றம் செய்யப்படும் என கலெக்டர் திவ்யதர்ஷினி அறிவித்தார்.

காந்தி மார்க்கெட்டை இடமாற்றினால் தேவையான பாதுகாப்பு அளிக்கப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் அருண் கலெக்டரிடம் பரிந்துரை கடிதம் அளித்தார். நேற்று முன்தினம் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டியில் கொரோனா பரவல் குறையும் வரை காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படும் என தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து நேற்று மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், திருச்சியில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதால் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகிறது.

இங்கு நடந்த வியாபாரம் இன்று 16ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை மேலப்புலிவார்டு ரோடு காமராஜர் வளைவு முதல் வெல்லமண்டி சாலை சந்திப்பு வரை கீழ்புறம் இரவு மொத்த வணிகம் நடக்கும், மேல்புறத்தில் காலை 6 மணி முதல் 10மணி வரை சில்லரை வணிகமும் நடைபெறும் எனவும், இங்கிலிஸ் காய்கறிகள் விற்னை பாலக்கரை பஜார் முதல் சிவாஜி சிலை வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அரசின் வழிகாட்டுதலின்படி காந்தி மார்க்கெட் இன்று புதிய இடமான மேலபுலிவார்டு ரோட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது. காமராஜர் வளைவு முதல் வெல்லமண்டி சாலை சந்திப்பு வரை மேல்புறத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரை சில்லரை வணிகம் நடைபெற்றது.

பாலக்கரை பஜார் முதல் சிவாஜி சிலை வரை இங்கிலிஸ் காய்கறிகள் விற்பனை நடைபெற்றது. கடந்த 2 நாட்களாக கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் காய்கறிகள் வாங்க மக்கள் இன்று அதிகளவில் குவிந்தனர். அப்போது போலீசார் சமூக இடைவெளியை பின்பற்றும்படி உத்தரவிட்டனர். மேலும், முககவசம் அணியாக வியாபாரிகள், பொதுமக்களுக்கு அபராதம் விதித்தனர். இதேபோல் இன்றிரவு முதல் காமராஜர் வளைவு முதல் வெல்லமண்டி சாலை சந்திப்பு வரை கீழ்புறம் மொத்த வணிகம் நடைபெற உள்ளது. ஏற்கனவே பொன்மலை ஜி.கார்னருக்கு செல்லும்படி கூறியபோதோ அங்கு போதிய பாதுகாப்பு இல்லை. பொதுமக்கள் அதிகம் வரமாட்டார்கள் என அங்கு செல்ல மறுத்துவிட்டோம்.

இதனால் அரசு தற்போது காந்தி மார்க்கெட் அருகிலே மேலபுலிவார்டு ரோட்டில் வியாபாரம் செய்ய அரசு இடம் ஒதுக்கியுள்ளது. அரசு ஒதுக்கிய இந்த இடத்திலும் போதிய வசதி இல்லை. இதனால் காந்தி மார்க்கெட்டிலேயே மொத்த விற்பனையை நடத்திட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி காந்தி மார்க்கெட் ஒட்டு மொத்த வியாபாரிகள் சார்பாக இன்று முதல் விற்பனையில் ஈடுபடுவது இல்லை என முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில், தேங்கிய சரக்குகளை மட்டும் விற்பனை செய்ய முடிவெடுத்து அரசு அறிவித்த இடத்தில் இன்று விற்பனை செய்தனர். அரசு அறிவிப்புக்கு வியாபாரிகள் மீண்டும் ஒத்துழைப்பு அளிக்க மறுத்துவிட்டனர். காந்தி மார்க்கெட் செயல்படும்போதே வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு திருச்சயில் காய்கறிகள் விலை பல மடங்கு உயர்ந்தது.

முழு ஊரடங்கள் ேநற்று மார்க்கெட் இல்லை. இன்றும் காலை 6 முதல் 10 மணி வரையே இயங்கியது. நாளை முதல் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பால் தெருக்களில் உள்ள கடைக்காரர்கள், வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வந்து மூட்டை மூட்டையாக காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால் காய்கறிகள் பல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்கனவே வருவாய் இன்றி, வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் தவித்து வரும் மக்களுக்கு இது பேரிடியாக உள்ளது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: