தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஆலோசனை வழங்க அனைத்துக்கட்சி குழு அமைப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஆலோசனை வழங்க அனைத்துக்கட்சி குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி குழு அமைத்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்ததாலும் அதற்கான தடுப்பு நடவடிக்கைளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ஒருங்கிணைந்த செயல்பாடை மேற்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த நிலையில் கடந்த 13ஆம் தேதியன்று தலைமை செயலகத்தில் அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் கூட்டமானது நடைபெற்றது.

நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த கூடிய வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்குவதற்காக சட்டமன்ற கட்சி உறுப்பினர்களை கொண்ட ஒரு ஆலோசனை குழு அமைக்கலாம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் தற்போது ஆலோசனை குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள 13 கட்சிகளில் இருந்தும் தலா ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்துக்கட்சி குழு கூடி ஆலோசிக்கும்.

திமுக சார்பில் எழிலன், அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இடம்பெற்றுள்ளனர். காங்கிரஸ் சார்பில் முனிரத்தினம், பாமக சார்பில் ஜி.கே.மணி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார் இடம்பெற்றுள்ளனர்.

விசிக சார்பில் எஸ்.எஸ்.பாலாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ராமச்சந்திரன், மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, கொ.ம.தே.க சார்பில் ஈஸ்வரன், த.வா.க சார்பில் வேல்முருகன், புரட்சி பாரதம் சார்பில் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டுள்ள அனைத்துக்கட்சி குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories: