மதுரை பெரியார் பேருந்து நிலைய ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் பல கோடி ரூபாய்க்கு மணல் கொள்ளை!: முதல்வருக்கு புகார்..!!

மதுரை: மதுரை பெரியார் பேருந்து நிலைய ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியின் போது பல கோடி ரூபாய்க்கு மணல் கொள்ளை நடந்ததாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை பெரியார் பேருந்து நிலையம், மதுரை ரயில்வே நிலையம், மீனாட்சி அம்மன் கோவில் மாசி வீதிகள் உட்பட பல்வேறு பிரபலமான பகுதிகளில் திட்ட பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக திமுக, கம்யூனிஸ்ட் போன்ற எதிர்க்கட்சிகள் ஆரம்பம் முதல் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வந்தன. இந்த நிலையில், மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்த் பாலாஜி என்பவர் தமிழக முதல்வர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையருக்கு கொடுத்த புகார் மனுவில், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் அந்த பகுதியில் தோண்டும் போது கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய கிராவல் மணல் அதிகளவில் கிடைத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த மணலை மாநகராட்சி தலைமை பொறியாளர் அரசு என்பவரும் மற்றும் சில அதிகாரிகள் இணைந்து அரசுக்கும், கனிமவள துறையினருக்கும் தெரியாமல் விற்பனை செய்துள்ளதாகவும் இதில் அரசுக்கு சுமார் 15 கோடி ரூபாய் அளவு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உட்படுத்தி கனிமவள கொள்ளையில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரவிந்த் பாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார். 

Related Stories: