50ஆயிரம் தொழிலாளிகள் பாதிப்பு ஊரடங்கால் முடங்கியது 20 ஆயிரம் சாலையோர தள்ளுவண்டி ஓட்டல்கள்: வாழ்வாதாரம் பறிபோனதாக வேதனை

சேலம்: முழு ஊரடங்கு அமலால் தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர தள்ளுவண்டி ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் 50 ஆயிரம் தொழிலாளிகள் வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான தொழில்நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கால் சிறிய, பெரிய ஓட்டல்கள், சாலையோர தள்ளுவண்டி ஓட்டல்கள், கையேந்தி பவன்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கில் ஓட்டல்கள் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரையும், நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரையும், இரவு 7  மணி முதல் இரவு 9 மணி வரை பார்சலுக்கு மட்டும் அரசு அனுமதியளித்தது. ஆனால் அரசு அறிவித்தது போல் ஓட்டல்கள் செயல்படவில்லை. இந்த நிலையில் முழு ஊரடங்கில் ஓட்டல்கள் செயல்படாலும் என்றும், ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடக்கூடாது என்றும், பார்சல் மட்டும் வழங்க வேண்டும் என்று அரசு கட்டுப்பாடு விதித்தது. இதையடுத்து ஒரு சில சிறிய, பெரிய ஓட்டல்கள் திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர். சிறிய, பெரிய ஓட்டல்களுக்கு பார்சல் மூலம் ஓரளவு வருவாய் கிடைக்கிறது.

ஆனால் தமிழகத்தில் காலை, மதியம், இரவு நேரங்களில் இயங்கும் சாலையோர தள்ளுவண்டி ஓட்டல்கள் கடந்த சில நாட்களாக செயல்படாததால், இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான வியாபாரிகள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் வாழ்வாதாரம் இழந்து பரிதவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து சாலையோர தள்ளுவண்டி ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகையில், ‘‘தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர தள்ளுவண்டி ஓட்டல்கள் உள்ளன.

இத்தொழிலை நம்பி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். தள்ளுவண்டி ஓட்டல்களில் காலை டிபனும், மதியம் வெரைட்டி ரைஸ், இரவு டிபன் வழங்கப்படுகிறது. இங்கு வேலை செய்யும் மாஸ்டருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 முதல் ரூ.600, சப்ளை ஆட்களுக்கு ரூ.250 முதல் ரூ.300 கூலி வழங்கப்படுகிறது. கொரோனா 2வது அலையால் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சிறிய, பெரிய ஓட்டல்களில் பார்சல் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக சாலையோர தள்ளுவண்டி ஓட்டல்கள் செயல்படவில்லை. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வேலையிழந்து வாழ்வாதாரம் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். எனவே சாலையோர தள்ளுவண்டி ஓட்டல் தொழிலை நடத்த சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் உரிய அனுமதியளிக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories:

>