திருச்சுழி பகுதியில் வனவிலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?..சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

திருச்சுழி: திருச்சுழி பகுதியில் வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருச்சுழி பகுதியில் உள்ள ஆனைக்குளம், புலிக்குறிச்சி, உடையனாம்பட்டி, மைலி, மீனாட்சிபுரம், மறவர் பெருங்குடி உள்பட 300 மேற்பட்ட கிராமப்பகுதிகளில் அடர்ந்த கருவேல மரங்கள் காணப்படுகின்றன. இம்மரங்களிக்கிடையே ஏராளமான மான், முயல், மயில், கரடி, காட்டுப்பன் உள்ளிளட்ட ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. தற்போது பெரும்பாலான கண்மாய், தனியார் நிலங்களில் உள்ள கருவேல மரங்களை நீதிமன்றம் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டன.

இதனால் வன விலங்குகள் தங்க இடமின்றியும், இரை தேடியும், தண்ணீருக்காகவும் அவ்வப்போது கிராமத்திற்குள் புகுந்து விடுகின்றன. இதனால் கிராமத்திலுள்ள நாய்கள் மான்களை விரட்டி கடிப்பதால் படுகாயம் ஏற்பட்டு அடிக்கடி மான்கள் செத்து மடிகின்றன. சில ஆண்டுகளாக பொம்மகோட்டை, திருச்சுழி, மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் மான்கள் ஊருக்குள் புகுந்ததால் அவற்றைப் பிடித்து திருவில்லிபுத்தூர் வனத்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் ஒப்படைத்து

வருகின்றனர். சிலநேரங்களில் மான், மயில் மற்றும் காட்டுபன்றிகளை மர்மநபர்கள் வேட்டையாடிச் செல்வதாக இப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், திருச்சுழி பகுதியிலுள்ள தோட்டங்களில் நெல், கடலை, மக்காச்சோளம் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளதால் கண்மாய் பகுதியில் அதிகளவில் மான்கள் தஞ்சம் புகுந்துள்ளன. கண்மாயில் உள்ள மரங்களை அவ்வப்போது அகற்றுவதால் இருக்க இடமின்றி, இடம்பெயரும்போது சாலையில் விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழக்கின்றன. தற்போது கிராமங்களில் அதிகளவில் நாய்கள் நடமாடுவதால் ஊருக்குள் வருகின்ற மான்களை துரத்தி காயப்படுத்துகின்றன. எனவே, இப்பகுதியில் உள்ள வனவிலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: