திண்டுக்கல்லில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கிவைப்பு

திண்டுக்கல்: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் எளிமையான முறையில் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மாதத்தில் அனைத்து நாட்களும் ரேஷன் கடைகள் செயல்படுவதற்கு ஆலோசனை நடத்தப்படுவதாக குறிப்பிட்டார்.

ஈரோட்டில் கொரோனா நிவாரணத்தொகை 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். இதன்மூலம் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 7.15 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார். காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்களை கண்காணித்து மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க 100 வீடுகளுக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

கும்பகோணத்தில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் கொரோனா நிவாரணநிதி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதேபோல் திருவிடைமருதூர், பாபநாசம், உள்ளிட்ட இடங்களிலும் கொடுக்கப்பட்ட டோக்கன் அடிப்படையில் குடும்ப அட்டைத்தாரர்கள் பணத்தை மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர். வருமானம் இல்லாத நேரத்தில் 2,000 ரூபாய் கொடுத்தது பெரும் உதவியாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: