தமிழகத்தில் ஊரடங்கு மேலும் தீவிரமாகும்: தோப்பூரில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்படும்..! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் Zero delay அடிப்படையில் ஆக்சிஜன் உடன் 150 புதிய படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது என்று மதுரையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். தோப்பூரில் கூடுதலாக ஆக்சிஜன் 500 படுக்கைகள் ஒரு வாரத்தில் தயாராகி விடும் எனவும் தெரிவித்துள்ளார். மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கு பிறகு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், நோய் தொற்று அதிகரித்து இருப்பதால் கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகள் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதன் படி, தோப்பூரில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்படும். மதுரைக்கு வழங்கப்பட்ட ரெம்டெசிவிர் மருந்து 500லிருந்து ஆயிரமாக அதிகரிக்கப்படும். முதலில் ரெம்டெசிவிர் மருந்து சென்னையில் மட்டும் விற்கப்பட்டது. முதல்வர் உத்தரவிட்டதையடுத்து 5 மாவட்டங்களில் கூடுதலாக விற்பனை தொடங்கியது. கடந்த 4 நாட்களாக மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்து கிடைக்கும். கூடுதலாக 20 ஆயிரம் மருந்துகள் வேண்டும் என மத்திய அரசிடம் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று இரவு 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சென்னை வந்தது. அதைப் பிரித்து விநியோகம் செய்து கொண்டிருக்கிறோம். ஸ்டெர்லைட் ஆலையில் பிரதான குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 2 அல்லது 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் உற்பத்தி தொடங்கும் என்றார். மேலும் ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், முழு ஊரடங்கு கடுமையாக்கப்பட வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உயரதிகாரிகளும் அதையே பரிந்துரைத்துள்ளனர். அதனடிப்படையில் ஊரடங்கை கடுமையாக்குவது பற்றி அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று தெரிவித்தார்.

Related Stories: