காக்காவேரி ஊராட்சியில் தெரு குழாயில் குடிநீர் வழங்க வலியுறுத்தல்

நாமகிரிப்பேட்டை : காக்காவேரி ஊராட்சியில், தெரு குழாயில் தொடர்ந்து தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாமகிரிப்பேட்டை  அருகே காக்காவேரி ஊராட்சிக்குட்பட்ட காந்திநகர், புதுகாலனி உள்ளிட்ட பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேம்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. கோடை தொடங்கியுள்ளதால் மக்கள் குடிநீருக்கு சிரமத்திற்குள்ளாகி வந்தனர். குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று தலைவர் முருகேசனிடம் புகார் மனு கொடுத்தபோது, ”தெரு குழாய்கள் மூலமாக குடிநீர் வழங்க முடியாது. டெபாசிட் தொகை செலுத்தி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்ளுங்கள்” என கூறிவிட்டார்.

அனைவரும் கூலி வேலைக்கு  சென்று வரும் நிலையில், கொரோனா ஊடரங்கால் வருவாய் இழந்து தவிக்கிறோம். இந்நிலையில், டெபாசிட் தொகை செலுத்தி, எங்களால் வீடுகளுக்கு இணைப்பு பெற முடியாது. எனவே, தெரு குழாயில் குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: