உறுப்பினர்கள் ஜனநாயக முறையில் நடந்து கொண்டால் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக தமிழக சட்டப்பேரவை திகழும்: சபாநாயகர் அப்பாவு உறுதி

சென்னை: அனைத்து உறுப்பினர்களும் ஜனநாயக முறையில் நடந்து கொண்டால் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக தமிழக சட்டப்பேரவை திகழும் என்று சபாநாயகர் அப்பாவு உறுதி அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில், சபாநாயகராக நேற்று பதவி ஏற்றுக்கொண்ட மு.அப்பாவுவை வாழ்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அவை முன்னவர் துரைமுருகன், காங்கிரஸ் சார்பில் பிரின்ஸ் உள்ளிட்ட  அனைத்துக்கட்சி தலைவர்களும் வாழ்த்தி பேசினர்.

இதையடுத்து நன்றி தெரிவித்து சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:  தமிழக சட்டப்பேரவை தலைவர் பொறுப்புக்கு என் பெயரை முன்மொழிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வழிமொழிந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் ஒருமனமாத தேர்ந்தெடுத்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த  நிலைக்கு வந்ததற்கு காரணமான ராதாபுரம் தொகுதி மக்களுக்கு நன்றி. கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்காக நீதி பெற சென்றேன். தகுதி, திறமை, ஆற்றல் மிகுந்தவர்கள் கூடியுள்ள இந்த சபைக்கு என்னை தலைவராக நியமித்துள்ளீர்கள். முதல்வரின் ஆசை என்னவென்றால், இந்த அவையை நான் ஜனநாயக முறையில் நடத்துவது என்பது.

 இந்த ஆட்சி எப்படி நடக்கும்?  மன்றம் எப்படி செயல்பட வேண்டும்? என்று முதல்வர் இங்கே கூறினார். எதிர்க்கட்சி தலைவர் விரும்பியதுபோல, இந்தியாவிலேயே எடுத்துக்காட்டான சட்டப்பேரவையாக இந்த அவை நடைபெறும். அனைத்து உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து  அதை நிறைவேற்றுவோம். அதற்காக நான் உழைப்பேன். என்னை இன்னும் தகுதியுடையவனாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு உள்ளது. 2016-17ல் தமிழகத்தில் பல அரசியல் மாற்றம் ஏற்பட்டது. நினைத்திருந்தால், அப்போதே இந்த இடத்திற்கு மு.க.ஸ்டாலின் முதல்வராக வந்திருக்கலாம். ஆனால், அவர் புறவாசல் வழியாக என்றைக்கும் வரமாட்டேன், மக்களை சந்தித்து  வருவேன் என்றார்.

அப்படியே இப்போது வந்திருக்கிறார். இந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள். முதல்வர் என்னை வாழ்த்தியதை வரமாக கருதுகிறேன். உண்மையான தொண்டர்களுக்கு தலைவர் பாராட்டுவதுதான் பிடிக்கும்.  அதை முதல்வரிடம் நான் பெற்றேன்.

இந்த சட்டமன்றத்திற்கு பல மரபு, மாண்பு இருக்கிறது. அனைவரும் அதன்படி நடக்க வேண்டும். அதற்கு முன் உதாரணமாக நான் நடப்பேன். சந்தேகம் வேண்டாம். நடந்தது நடந்தவையாகவே இருக்கும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.  மக்கள் பிரச்னை மட்டும் பேச வேண்டும். அதன்படி, அவை நடக்கும். எல்லோருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படும். சிறிய கட்சி, பெரிய கட்சி என்று பார்ப்பதில்லை. 234 உறுப்பினர்களையும் ஒன்றுபோல்தான் பார்ப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: