தஞ்சாவூரில் இருந்து நெல்லைக்கு 5 டன் ஆக்சிஜன் வருகை-மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பி வழிவதால் தேவை அதிகரிப்பு

நெல்லை : தமிழகத்தில் கொரோனா பரவல் 2ம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால் மூன்று மாவட்டங்களுக்கும் மையமாக திகழும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 900 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் கொரோனா பாதிப்புடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தினம் தோறும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆக்சிஜன் குறைவு காரணமாக படுக்கை தேவைப்படுகிறது. ஆனால் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. எனவே இங்கு குணமான நோயாளிகளை வேறு வார்டுகளுக்கு மாற்றினால் மட்டுமே படுக்கை வசதி கிடைக்கும் நிலை உள்ளது. இதனால் ஆக்சிஜன் படுக்கைகளுக்காக காலை முதல் இரவு வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாது நெல்லை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் கொள்கலனில் இருப்பு குறைந்து வருகிறது. இங்கு ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிப்பு காரணமாக ஆக்சிஜன் தேவை தினம் தோறும் அதிகரித்து வருகிறது. நெல்லை  அரசு மருத்துவமனைக்கு  திருச்சியில் இருந்தும், நெல்லை மாவட்டம், மகேந்திரகிரி இஸ்ரோவில் இருந்தும் ஆக்சிஜன்  வரவழைக்கப்படுகிறது.  தினமும் சராசரியாக 7 டன் ஆக்சிஜன் வரவழைக்கப்பட்ட  நிலையில்  நேற்று முன்தினம் 3 டன் ஆக்சிஜன் மட்டுமே வந்தது. இதனால் சமாளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டம், புதுக்குடியில் இருந்து 5 டன் ஆக்சிஜன் லாரியில் எடுத்து வரப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டது. இந்த லாரியில் இருந்து ஆக்சிஜன் அரசு மருத்துவமனை கொள்கலனில் நிரப்பப்பட்டு தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும்  500 உருளை ஆக்சிஜன்கள் தஞ்சாவூரிலிருந்து வாகனத்தில் எடுத்து வர ஏற்பாடு  செய்துள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியதும், அந்த ஆக்சிஜனை தூத்துக்குடி, நெல்லை அரசு  மருத்துவமனைகளுக்கு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரத்துறை  வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories:

>