கம்பம் அருகே மர்ம நபர்கள் வெட்டியதில் திராட்சைக் கொடிகள் நாசம்: ரூ.5 லட்சம் இழப்பு என விவசாயி வேதனை

கம்பம்: கம்பம் அருகே உள்ள கே.கே.பட்டியைச் சேர்ந்த மணிசேகருக்கு சொந்தமான 5 ஏக்கர் தோட்டம், கருநாக்கமுத்தன்பட்டி விலக்கு அருகே உள்ளது. இந்த தோட்டத்தை புதுப்பட்டியைச் சேர்ந்த கணேசன் குத்தகைக்கு எடுத்து 4 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறார். இதில், 2 ஏக்கரில் திராட்சை தோட்டம் உள்ளது. 10 நாட்களில் திராட்சை பழங்கள் வெட்டும் தருவாயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற கணேசன், நேற்று காலை  தோட்டத்திற்கு வந்தபோது, அங்கிருந்த 500 திராட்சைக் கொடிகள் வெட்டி சேதப்படுத்தியதைக் கண்டார். இது குறித்து மணிசேகருக்கும், ராயப்பன்பட்டி போலீசாருக்கும் தகவல் அளித்தார்.

இதன்பேரில் வந்த போலீசார் சேதப்படுத்திய திராட்சைக் கொடிகளை பார்வையிட்டனர். கணேசன் அளித்த புகாரின்பேரில் கொடிகளை வெட்டி சேதப்படுத்திய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து கணேசன் கூறுகையில், ‘திராட்சை கொடிகளை உருவாக்க ரூ.பல லட்சம் செலவு செய்துள்ளேன். இன்னும் 10 நாட்களில் திராட்சை பழங்களை வெட்டும் நிலையில், கொடிகளை மர்மநபர்கள் வெட்டி சேதப்படுத்தியுள்ளனர். சுமார் ரூ.5 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மர்மநபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: