குமரியில் 2 வாரத்துக்கு பின் ஞாயிற்றுக்கிழமையில் ஊரடங்கு தளர்வு காய்கறி, மளிகை, இறைச்சி கடைகளில் மக்கள் குவிந்தனர்-சலூன் கடைகளிலும் நீண்ட கியூ

நாகர்கோவில் :2 வார முழு ஊரடங்கு இன்று தொடங்குவதால், நேற்று கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இறைச்சி கடைகள், மளிகை கடைகளில் மக்கள் குவிந்தனர். சலூன் கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் இன்று (10ம் தேதி) முதல் இரு வாரங்களுக்கு  முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டு பொதுமக்கள், வியாபாரிகள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி ஞாயிற்றுகிழமையான நேற்று கடை வீதிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் 25ம் தேதியும், மே 2 ம் தேதியும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு காரணமாக குமரி மாவட்டத்திலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. அரசு, தனியார் பஸ்கள், வேன், ஆட்டோக்கள் இயங்க வில்லை. மக்கள் வீடுகளில் முடங்கினர். வீதிகள் வெறிச்சோடின.

இந்த நிலையில் நேற்று முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறந்தன. பஸ்களும் வழக்கம் போல் இயங்கின. கோட்டார், வடசேரி பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இறைச்சி கடைகளும் திறந்து இருந்தன. மக்கள் நீண்ட வரிசையில் நின்று இறைச்சிகளை வாங்கி சென்றனர்.

வடசேரி காய்கறி சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்டா மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து காய்கறிகள், பழங்களை வாங்கி சென்றனர். நாகர்கோவிலில் பாலமோர் ரோடு, கேப் ரோடு, கே.பி. ரோடு, செம்மாங்குடி ரோடு, அலெக்சாண்ட்ரா பிரஸ் ரோடு உள்ளிட்ட  பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் திறந்து இருந்தன. இதனால் வீதிகளில் வாகனங்கள் குவிந்தன. இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறந்து இருந்தன. நகை கடைகளும் திறந்து இருந்ததால் திருமணத்துக்கான நகைகள் வாங்கவும் வாடிக்கையாளர்கள் குவிந்தனர். கார், பைக்குகளில் கடை வீதிகளில் மக்கள் திரண்டதால், முக்கிய சாலைககள் வாகனங்களால் நிரம்பின.

மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் திறந்து இருந்தன. சுற்றுலா தலங்கள், கடற்கரைகளில் மக்கள் அனுமதிக்கப்பட வில்லை. தியேட்டர்கள் திறக்கப்பட வில்லை. 10 நாட்களுக்கு மேல் பூட்டப்பட்டு இருந்த சலூன் கடைகள் நேற்று முன் தினம் திறக்கப்பட்டன.

நேற்றும் கடைகள் திறந்து இருந்தன. காலையிலேயே சலூன் கடைகளில் வாடிக்கையாளர்கள் குவிந்தன.  இரு வாரங்கள் ஊரடங்கு என்பதால் முடி திருத்தம் செய்யவும், சேவிங் செய்யவும் பலர் காத்திருந்தனர். நேற்று ஞாயிற்றுகிழமைகளில் சில திருமண மண்டபங்களில் திருமண நிகழ்ச்சிகள் நடந்தன. அங்கு குறைந்த அளவு தான் உறவினர்கள் வந்து மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

பத்திரிகைகள் விற்பனைக்கு தடை இல்லை

தமிழ்நாட்டில் இன்று முதல் 2 வாரங்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. எனினும்  பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம் உள்ளிட்ட அத்தியாவசியமான சேவைகள் முழு ஊரடங்கின்போது அனுமதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பத்திரிகை விற்பனையாளர்கள் தினசரி பத்திரிகைகளை வழக்கம் போல் விற்பனை செய்யலாம் என்றும் காவல்துறையினர் தரப்பிலும் தெரிவித்துள்ளனர்.

Related Stories: