5 மாநில தேர்தல் முடிந்த நிலையில், 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு : 93 ரூபாய் தாண்டியது பெட்ரோல்!!

சென்னை : 5 மாநில தேர்தல் முடிந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை இன்று தொடர்ந்து 4வது நாளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் உச்சத்தை நோக்கி செல்கிறது.சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதத்திற்கு முன் வரை தொடர்ந்து 6 மாதமாக விலை ஏற்றப்பட்டதால், பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

இதனிடையே தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் வந்ததால், மார்ச், ஏப்ரல் மாதத்தில் விலையை ஏற்றாமல், நிலையாக வைத்துக் கொண்டனர். இந்த மாநிலங்களில் தேர்தல் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்த தொடங்கியுள்ளது. கடந்த 4ம் தேதி முதல் இன்று (7ம் தேதி) வரை தொடர்ந்து 4 நாட்கள் விலையை அதிகரித்துள்ளனர்.

தொடர்ந்து 4வது நாளாக இன்று, பெட்ரோல் 25 காசும், டீசல் 30 காசும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹93.15க்கும், டீசல்  ₹86.65க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.பெட்ரோல், டீசல் விலையை பழையபடி மீண்டும் மத்திய அரசு உயர்த்தி வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று, ஊரடங்கு கட்டுப்பாடு என பல்வேறு பிரச்னைகளால் வேலையிழந்து பொருளாதாரத்தில் மிகவும் சிரமப்பட்டு வரும் மக்களுக்கு, இவ்விலையேற்றம் மேலும் பாதிப்பை தந்துள்ளது. இதனால், பெட்ேரால், டீசல் விலையை உயர்த்தாமல், அதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும், மக்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>