குளச்சல் மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படுமா?.. மீனவர்கள் எதிர்பார்ப்பு

குளச்சல்: குளச்சலில் 1959ம் ஆண்டு விசைப்படகு அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு படகுகளை நிறுத்த 5.8.2008ல் அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர்  மு.க.ஸ்டாலின்  துறைமுகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் ஆட்சி மாற்றம்  ஏற்பட்டதால் துறைமுகம் அறைகுரையாக முடிக்கப்பட்டது. இதனால் அங்கு 31  விசைப்படகுகள் மட்டுமே நிறுத்த முடிகிறது. தற்போது இங்கு சுமார் 450  விசை படகுகள் உள்ளன. எனவே துறைமுகத்தை  விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் நாகர்கோவிலில் தேர்தல் பிரசாரம் செய்த தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க.ஆட்சி அமைந்ததும் குளச்சல் மீன்படி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படும் என உறுதியளித்தார்.

தற்போது மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வராகி உள்ளார். எனவே குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து குளச்சல் விசைப்படகு சங்க தலைவர் பிரான்சிஸ், துணைத்தலைவர் அந்திரியாஸ்,  செயலாளர் பிராங்கிளின் ஆகியோர் கூறியதாவது, குளச்சலில் 2008ல் மு.க.ஸ்டாலின் மீன் பிடி துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டினார். அங்கு போதிய இடவசதி இல்லாததால் தற்போது முதல்வராகி உள்ள மு.க.ஸ்டாலின் துறைமுகத்தை விரிவாக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். துறைமுகத்தின் மேற்கு அலை தடுப்பு  சுவரை தென் கிழக்காக 600 மீட்டர் நீட்டித்தால் அனைத்து படகுகளையும்  பாதுகாப்பாக நிறுத்த இட வசதி ஏற்படும் என கூறினர்.

Related Stories: