ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து வீட்டில் கஞ்சா பதுக்கிய வக்கீல் உள்பட 2 பேர் அதிரடி கைது: முக்கிய குற்றவாளிக்கு போலீஸ் வலை

புழல்: சென்னை கொளத்தூர் ரெட்டேரி மீன் மார்க்கெட் அருகே கஞ்சா கடத்தி வருவதாக அண்ணா நகர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மஞ்சுளாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் நேற்று மாலை மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். மீன் மார்க்கெட் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து தீவிரமாக விசாரணை  செய்தபோது, அவர்  முன்னுக்குப்பின் பதில் கூறியதனால் சந்தேகமடைந்த போலீசார் மேலும் விசாரணை செய்ததில் சென்னை கொளத்தூர் செல்லியம்மன் நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த அரவிந்த் (26) என்பதும், இவர் கார் மெக்கானிக்காக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

மேலும், இவர் கொடுத்த தகவலின் பேரில் புத்தகரம் கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தர் (26) என்பவருடைய  வீட்டுக்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 4 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இந்த சுந்தர் ஆந்திர மாநிலத்தில் எல்எல்பி, அதாவது வக்கீலுக்கு படித்து  முடித்துள்ளார். மேற்படி விசாரணையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பாடியநல்லூர் சிக்னல் அருகே ஆந்திராவிலிருந்து இவர்களது நண்பர் மகேஷ் என்பவர் கொண்டு வந்து கொடுத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, சுந்தர் மற்றும் அரவிந்த் ஆகியோரை புழல் காவல் நிலையத்தில் மதுவிலக்கு போலீசார் ஒப்படைத்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து, இவர்கள் வேறு எங்காவது கஞ்சாவை பதுக்கி வைத்திருக்கிறார்களா, ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சாவை இவர்கள் எங்கெங்கு சப்ளை செய்கிறார்கள், இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யும் முக்கிய குற்றவாளி யார் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: