தமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு: நாளை காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா

சென்னை: திமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடந்து மு.க.ஸ்டாலின் நேற்று தமிழக கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையேற்று ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி நாளை காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக மட்டும் 125 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க உள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் நாளை (7ம் தேதி) காலை 9 மணிக்கு பதவியேற்க உள்ளார்.முன்னதாக திமுக சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நேற்று முன்தினம் மாலை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் 125 பேரும், திமுக சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர், மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏக்கள் 2 பேர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எம்எல்ஏ ஒருவர், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி ஒன்று என மொத்தம் 133 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் திமுக சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலினை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்மொழிந்தார். அதை அனைத்து திமுக எம்எல்ஏக்களும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டு, கைத்தட்டி தங்கள் வரவேற்பை தெரிவித்தனர். இதையடுத்து, திமுக சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் கையெழுத்திட்டனர். திமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் நேற்று காலை 10.30 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை  செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடன்  இருந்தனர். கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் பூங்கொத்து மற்றும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழக கவர்னரும் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து மற்றும் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். அப்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் வழங்கி, தனது தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடம் நடைபெற்றது.

திமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை மு.க.ஸ்டாலினிடம் பெற்றுக் கொண்ட கவர்னர் பன்வாரிலால், தனது தனி செயலாளர் ஆனந்தராவ் பாட்டீல் மூலம், தமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு கடிதத்தை அனுப்பி வைத்தார். அவரும், சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டுக்கு நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு நேரில் வந்து கவர்னரின் கடிதத்தை கொடுத்தார். இதையடுத்து தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் நாளை காலை 9 மணிக்கு பதவியேற்பதற்கான வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. விழாவில் கலந்து கொள்ள முக்கிய விஐபிக்களுக்கு மட்டும் அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அழைப்பு கடிதம் வைத்துள்ளவர்கள் மட்டுமே விழாவில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படும்.தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் உள்ள நிலையில், முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் விழா நாளை காலை 9 மணிக்கு சென்னை, ஆளுநர் மாளிகையில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் எளிமையான முறையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளி விட்டு இருக்கைகள் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு  தமிழக கவர்னர் பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்க திமுக எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், கூட்டணி எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ள அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சில கட்சி தலைவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட உள்ளது. அதேபோன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஒரு சிலர் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளனர். பதவியேற்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், கவர்னரின் தனி செயலாளர் ஆனந்தராவ் பாட்டீல், தமிழக டிஜிபி திரிபாதி, தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் செய்து வருகிறார்கள். ஆளுநர் மாளிகையில் உள்ள ஊழியர்கள், விழாவில் பங்கேற்பவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

* சட்டமன்ற தேர்தலில் திமுக மட்டும் 125 இடங்களில் அமோக வெற்றி பெற்று தனி மெஜாரிட்டி பெற்றுள்ளது.

* திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக ேதர்வு செய்யப்பட்டார்.

* தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் நாளை காலை 9 மணிக்கு பதவி ஏற்க உள்ளார்.

Related Stories: