கொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் குவியும் ஆம்புலன்ஸ்கள்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள கொரோனா பிரிவில் நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் காத்திருக்கும் நிலை என்பது ஒருசில நாட்களாக இருந்து வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஓமாந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் ஒருசில தினங்களில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை உள்ளது.

கடந்த 3ஆம் தேதி இரவு 20 ஆம்புலன்ஸ்கள் வரை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் இருந்தது. சில தினங்களுக்கு முன்பாக ஸ்டான்லி மருத்துவ கல்லூரி வளாகத்தில் இரவு நேரத்தில் சுமார் 15 ஆம்புலன்ஸ்கள் வரை காத்திருக்க கூடிய சூழ்நிலை இருந்து வந்தது. தமிழகத்தில் தற்போதைய நிலையில் 35,000 ஆக்சிஜன் படுக்கைகள் அரசிடம் இருக்கின்றன. சென்னையை பொறுத்தவரை 6000 படுக்கைகள் அரசிடம் இருக்கின்றன. சென்னையில் தற்போது 33,000 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு இந்த 6000 படுக்கைகள் என்பது போதுமானதாக இருக்காது. கொரோனா முதல் அலையின் போது 100 பேரில் 10 பேருக்கு ஆக்சிஜன் தேவை இருந்தது. ஆனால் 2வது அலையின் போது 100 பேரில் சுமார் 50 பேருக்கு ஆக்சிஜன் தேவை இருக்கிறது. அதை உணர்ந்து தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் படுக்கைகளின் தற்போதைய இருப்பை இருமடங்காக உயர்த்த வேண்டும் என்பது தொற்றுநோய் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

Related Stories: