பிளாஸ்டிக்குக்கு மாற்றாக வியாபாரிகள் ஆர்வம்: பனை ஓலை பெட்டிக்கு மவுசு அதிகரிப்பு

நெல்லை:  நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பிளாஸ்டிக் கவர்களுக்கு மாற்றாக பனை ஓலை பெட்டிகளை பலசரக்கு வியாபாரிகள் ஆர்டர் செய்வது மீண்டும் அதிகரித்துள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகம் உள்ளன. இந்த மரத்தின் மூலம் கிடைக்கும் ஏராளமான பலன்களால் இதை நம்பி தொழில் செய்பவர்கள் கிராமப்பகுதிகளில் அதிகம் உள்ளனர். பனை மரத்தில் உள்ள பனை ஓலைகள் பொங்கலிடவும், கை விசிறி, பெட்டி, விளையாட்டு பொருட்கள் செய்யவும் என பல வகைகளில் பயன்படுகின்றன. ஆயினும் காலச்சுழற்சியால் பிளாஸ்டிக் பொருட்களின்  பயன்பாடு அதிகரிப்பதால் பனை பொருட்களுக்கான மதிப்பு குறைந்து விட்டது. குறிப்பாக பிளாஸ்டிக் கவர்களை ெபரும்பாலானவர்கள் பயன்படுத்துவதால் பனை ஓலையால் தயாரிக்கப்படும் பெட்டிகளுக்கு வரவேற்பு குறைந்தது. இதனிடையே பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு தடை இருந்த போதும், இப்போதும் மக்காத சாதாரண பிளாஸ்டிக் கவர்களின் புழக்கம் தாராளமாக உள்ளது.

இந்நிலையில் பிளாஸ்டிக் கவர்களுக்கு மாற்றாக நெல்லையில் சில பலசரக்கு வணிகர்கள் தங்கள் கடைகளில் கருப்பட்டி, வெல்லம், அச்சுவெல்லம் போன்ற பொருட்களை மீண்டும் பனை ஓலை பெட்டியில் வைத்து வழங்கும் வழக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்.  குறைந்தது 1 கிலோ, 2 கிலோ அளவில் வாங்குபவர்களுக்கு அளவிற்கு ஏற்ப பனை ஓலை பெட்டிகளில் வைத்து கொடுக்கின்றனர். இதற்காக அவர்கள் திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பனை ஓலை பெட்டிகளை தயாரிக்க ஆர்டர் கொடுக்கின்றனர். அங்கு தயாரிக்கப்படும் பனை ஓலை பெட்டிகள் ஆட்டோ போன்ற வாகனங்களில் எடுத்து வந்து நெல்லை வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். பலசரக்கு வியாபாரிகள் மட்டுமின்றி சில மிட்டாய்கடை வியாபாரிகளும் பனை ஓலை பெட்டிகளை வழங்கத் தொடங்கி விட்டனர்.

பாளையில் சில பகுதிகளில் மாலை நேரங்களில் இனிப்பகங்கள் முன் கருப்பட்டி மிட்டாய் சூடாக தயாரித்து விற்பனை செய்கின்றனர். இவற்றை வாங்கி அங்கேயே சுவைப்பவர்களும் உள்ளனர். வீட்டுக்கு வாங்கி செல்பவர்களும் உள்ளனர். வீட்டுக்கு பார்சலாக கருப்பட்டி மிட்டாய் வாங்குபவர்களுக்கு பனை ஓலை பெட்டியில் கருப்பட்டி மிட்டாய் வழங்கப்படுகிறது. இதனால் மிட்டாய் வியாபாரிகளும் இந்த பெட்டிகளை ஆர்டர் செய்யத் தொடங்கியுள்ளனர்.

Related Stories:

>