பூத்துக் குலுங்குது பிரையண்ட் பூங்கா: கவர்ந்திழுக்கும் ‘இளவரசி’பார்த்து ரசிக்க ஆளில்லை

கொடைக்கானல்: ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் கோடை சீசன் பூக்கள் பூக்கத் துவங்கி விட்டன. சுற்றுலாப் பயணிகள் வர தடையால் பூக்களை ரசிக்க ஆளின்றி பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இது கோடை சீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் ஆண்டுதோறும் கோடைவிழா, மலர் கண்காட்சி ஆகியவை நடைபெறும். லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கலந்து கொள்வது வழக்கம். தற்போது கொரோனா 2வது அலையால் கொடைக்கானல் மலைப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கோடை விழா, மலர் கண்காட்சி ரத்து செய்யப்படும் சூழ்நிலை உண்டாகியுள்ளது.

இதனால் கொடைக்கானலில் சுற்றுலா தொ ழில் புரிவோரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் கோடை சீசன் காலத்தில் பிரையண்ட் பூங்காவில் பூக்கள் பூக்கும் வண்ணம் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

அதன்படி தற்போது பூங்காவில் லட்சக்கணக்கான வண்ண மலர்கள் பூக்க துவங்கியுள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் பூக்கள் அனைத்தும் முழுமையாக பூத்து குலுங்கும் என பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், ‘‘கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வழக்கம்போல் கோடை சீசனுக்காக பூக்கள் பூக்க ஏற்பாடு செய்தோம். தற்போது ரோஜா உள்ளிட்ட பல வண்ண மலர்கள் பூக்க ஆரம்பித்துள்ளன. ஆனால் இதை ரசிப்பதற்குதான் ஆள் இல்லாமல் உள்ளது. வரும்காலத்தில் கொரோனாவின் வீரியம் அதிகரிக்கும் என கூறிவருவதால் இந்த ஆண்டும் மலர் கண்காட்சி நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது’’ என்றனர்.

Related Stories: