புதுவை கவர்னரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் ரங்கசாமி; தேஜ கூட்டணி அமைச்சரவை பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்: அடுத்தவாரம் எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம்

புதுச்சேரி: புதுச்சேரியில் தேஜ கூட்டணி அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேதி இறுதியானதும் முக்கிய விஐபிக்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்து எளிமையாக  பதவியேற்பு விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு அடுத்தவாரத்தில் எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 15வது சட்டசபைக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ஏப்ரல் 6ம்தேதி வாக்குபதிவு நடைபெற்று மே 2ம்தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் என்ஆர் காங்கிரஸ் 10, கூட்டணி கட்சியான பாஜக 6 தொகுதிகளில் வெற்றிபெற்றன.

திமுக 6, காங்கிரஸ் 2 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து தேஜ கூட்டணி கட்சி சார்பில் சட்டசபை தலைவராக ரங்கசாமியை தனித்தனியாக கூடிய ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு 2 கட்சிகளின் எம்எல்ஏக்களும் கையெழுத்திட்டு அதற்கான கடிதத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை நேற்று மாலை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்தை வழங்கினர். அப்போது தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு ரங்கசாமி கேட்டுக்

கொண்டார். பின்னர் கவர்னர் தமிழிசை கூறும்போது, தேஜ கூட்டணியின் கூட்டம் நடத்தப்பட்டு 16 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதம் என்னிடம் தரப்பட்டுள்ளது.

அவர்கள் எப்போது பதவியேற்க நேரம்  கேட்கிறார்களோ அப்போது நேரம் ஒதுக்கித் தரப்படும் என்றார். மேலும் புதிதாக தேர்வான எம்எல்ஏக்களுக்கு தனது வாழ்த்துக்களையும் கவர்னர் தெரிவித்துக் கொண்டார். இதனிடையே வருகிற 7ம்தேதி (வெள்ளி) பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை என்ஆர் காங்கிரஸ் வட்டாரங்கள் செய்து வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன. அதேவேளையில் பாஜக தரப்பில் மே 9ம்தேதி (ஞாயிறு) பதவியேற்கலாம் என ரங்கசாமியிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதனால் தேதியை இறுதி செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

இருப்பினும் இந்த வார இறுதிக்குள் ரங்கசாமி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்கக் கூடும் என்று கவர்னர் மாளிகை வட்டாரங்கள் உறுதிபட தெரிவிக்கின்றன. புதிய அமைச்சரவையில் ரங்கசாமி முதல்வராகவும், நமச்சிவாயத்திற்கு இரண்டாவது இடம் கிடைக்கும் என ெதரிகிறது. மற்றபடி என்ஆர் காங்கிரசில் 3, பாஜகவில் 1 அமைச்சர்கள் அவர்களுடன் பதவியேற்றுக் கொள்கிறார்கள். இதனிடையே என்ஆர் காங்கிரஸ், பாஜக அமைச்சர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்பிறகு அடுத்த வாரத்தில் சட்டசபை கூடி தற்காலிக சபாநாயகர் மூலம் புதிய எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும்.

அதைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முறைப்படி சபை அலுவல்கள் நடைபெறும் என்று தெரிகிறது. என்ஆர் காங்கிரசுடன் கூட்டணி அமைச்சரவையில் பாஜக பங்கேற்பதால் எதிர்க்கட்சி அந்தஸ்து திமுகவுக்கு கிடைக்கும். இதனால் சட்டசபையில் 14 வருடங்களுக்குபின் திமுக மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியின் 15வது சட்டசபைக்குள் புதுமுகங்களாக 14 பேர் காலடி எடுத்து வைப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தின் 20வது முதல்வராக ரங்கசாமி விரைவில் பதவியேற்க உள்ளார்.

அவர் ஏற்கனவே 3 முறை முதல்வர் பதவியில் அமர்ந்துள்ள நிலையில் தற்போது 4வது  முறையாக இந்நாற்காலியில் அமர்கிறார். இதன்மூலம் புதுச்சேரியில் அதிகம் முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற சிறப்பும் ரங்கசாமிக்கு கிடைக்கும்.

20வது முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக  ஏற்கனவே 19 பேர் பதவி வகித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

1.    குபேர் (1963),

2.    வெங்கடசுப்பா ரெட்டியார் (1964)

3.    பரூக் மரைக்காயர் (1967)

4.    வெங்கடசுப்பா ரெட்டியார் (1968)

5.    பரூக் மரைக்காயர் (1969)

6.    ராமசாமி (1974)

7.    ராமசாமி (1977)

8.    டி.ராமச்சந்திரன் (1980)

9.    பரூக் மரைக்காயர் ( 1985)

10.    டி.ராமச்சந்திரன் (1990)

11.    வைத்திலிங்கம் (1991)

12.    ஜானகிராமன் (1996)

13.    சண்முகம் (2000)

14.    சண்முகம் (2001)

15.    ரங்கசாமி (2001)

16.    ரங்கசாமி (2006)

17.    வைத்திலிங்கம் (2008)

18.    ரங்கசாமி (2011)

19.    நாராயணசாமி (2016)

Related Stories: