13 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.4லட்சம் மானியத்தில் வீடு

கரூர், ஏப்.4: கரூர் மாவட்ட மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டரங்கில் நேற்று கைத்தறித்துறை சார்பில் 13 கைத்தறி நெசவாளர்களுக்கு தலா ரூ.4 லட்சம் மானியத்துடன் வீடு கட்டும் திட்டத்திற்கான ஆணையினை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார். அப்போது கலெக்டர் தெரிவித்ததாவது: தமிழக முதல்வர் ‘‘நெசவாளர் நலன்” என்ற தலைப்பில் ‘‘நெசவாளர்களுக்கு வீடுகள் கட்ட மானியமாக வழங்கப்படும் தொகை 4 லட்சம் ரூபாய் என உயர்த்தித்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இத்திட்டம் நகர்ப்புற நெசவாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். அதன்படி, தமிழக அளவில் கிராமப்புறத்தினைச் சார்ந்த 70 கைத்தறி நெசவாளர்களுக்கும் மற்றும் நகர்ப்புறத்தினைச் சார்ந்த 511 கைத்தறி நெசவாளர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், கரூர் மாவட்டத்தைச் சார்ந்த 13 நகர்ப்புற கைத்தறி நெசவாளர்கள் மானியத்துடன் கூடிய வீடு கட்டும் திட்டத்திற்கு தேர்வாகியுள்ள நிலையில், அவர்களுக்கு நேற்று ஆணைகள் வழங்கப்பட்டது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அனைவருக்கும் வீடு நகர்ப்புறத் திட்டத்தில் மத்திய அரசு ரூ.1,50,000, மாநில அரசு ரூ.2,50,000 நிதி ஒதுக்கீடு மொத்தம் ரூ.4 லட்சம் மானியத்துடன் வீடு கட்டுவதற்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா” அனைவருக்கும் வீடு” கிராமப்புறத் திட்டத்தில் மத்திய அரசு ரூ.79,200, மாநில அரசு ரூ.3,20,800 நிதி ஒதுக்கீடு மொத்தம் ரூ.4 லட்சம் மானியத்துடன் வீடு கட்டுவதற்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இத்திட்டத்தில் இரண்டாவது கட்டமாக பயனாளிகளை கண்டறியும் பணி நடைபெற்று வருவதால் தேவைப்படுவோர்கள் கூட்டுறவு சார்ந்த கைத்தறி நெசவாளர்கள் உரிய ஆவணங்களுடன் தங்களது தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தினை உடனடியாக தொடர்பு கொண்டு பயனடையலாம் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார். தொடர்ந்து கைத்தறித்துறை சார்பில் 13 கைத்தறி நெசவாளர்களுக்கு தலா ரூ.4 லட்சம் மானியத்துடன் வீடு கட்டும் திட்டத்திற்கான ஆணையினை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி, உதவி இயக்குநர் (கைத்தறி) கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் (த.நா நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்) தமிழரசன் தனித்துணை ஆட்சியர் (சபாதி) சைபுதீன், மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post 13 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.4லட்சம் மானியத்தில் வீடு appeared first on Dinakaran.

Related Stories: