கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் வெற்றி: 1.34 லட்சம் வித்தியாசத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வி

நாகர்கோவில்: கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. முன்னாள் எம்.பி வசந்தகுமாரின் மகன் விஜயகுமார் என்ற விஜய்வசந்த் வெற்றி பெற்றுள்ளார். கன்னியாகுமரி தொகுதி எம்.பி. எச்.வசந்தகுமார், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மரணமடைந்தார். இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் எச்.வசந்தகுமாரின் மகனும், காங்கிரஸ் மாநில பொதுசெயலாளருமான விஜயகுமார் என்ற விஜய்வசந்த் போட்டியிட்டார்.

 பா.ஜ சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் 9 வது முறையாக போட்டியிட்டார். மொத்தம் 10 லட்சத்து 81 ஆயிரத்து 207 வாக்குகள் பதிவானது. வாக்கு எண்ணிக்கை நேற்று நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரி கட்டிடத்தில் நடைபெற்றது. முதல் சுற்றிலிருந்தே விஜய்வசந்த் முன்னிலை வகித்து வந்தார். மொத்தம் 30 சுற்றுக்கள் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த்  5 லட்சத்து 67 ஆயிரத்து 280 வாக்குகள் பெற்றார். பா.ஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்4,32,906 பெற்றார். இதையடுத்து 1 லட்சத்து 34 ஆயிரத்து 374 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வசந்த் முன்னிலை பெற்றார். தபால் ஓட்டு எண்ணப்படாத நிலையில் அவர் வெற்றி உறுதியானது.

Related Stories: