திருவள்ளூரில் நடந்த சிறப்பு குறைதீர் கூட்டத்தில் ஆட்டிசம் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு தின விழா: மாணவ, மாணவியர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூரில் நடந்த சிறப்பு குறைதீர் கூட்டத்தில் ஆட்டிஸம் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு தின விழா நடந்தது. இதில் மாணவர்களுக்கு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பரிசு வழங்கினார். திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தேசிய அறக்கட்டளை வழிகாட்டுதலின்படி, “உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஹோப் ஆட்டிஸம் குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சிப் பள்ளி சார்பாக உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தின விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்துகொண்டு ஆட்டிஸம் குழந்தைகளுக்கு கேக் ஊட்டி, வாழ்த்து தெரிவித்து பேசினார்.

அப்போது அவர் பேசும்போது, சமீபத்திய ஆய்வுகளின்படி 67 குழந்தைகளில் 1 குழந்தைக்கு ஆட்டிஸம் பாதிப்பு உள்ளது. ஆட்டிஸம் ஒரு ஸ்பெக்ட்ரம் பாதிப்பு என்பதால், மன இறுக்கம் கொண்ட ஒவ்வொருவருக்கும் தனித்தனியான சவால்கள் உள்ளன. பொதுவாக 2 அல்லது 3 வயதிற்குள் உள்ளவர்களுக்கு ஆட்டிஸத்தின் அறிகுறிகள் தோன்றும். ஆட்டிஸத்திற்கு சிகிச்சை இல்லை. ஆனால் மன இறுக்கம் கொண்டவர்கள் முழுமையான மற்றும் பயனுள்ள வாழ்க்கையை வாழ உதவும் சிகிச்சைகள் உள்ளன. அவர்களின் தனிப்பட்ட திறமைகளான இசைப் பயிற்சி, பாடுதல், அறிவு சார்ந்த திறன்கள், ஓவியம், தடகளம் போன்றவற்றை, வழக்கமான தொழில்சார் பயிற்சி, பேச்சு பயிற்சி, சிறப்புக் கல்வி நடத்தை மாற்றம், விளையாட்டு பயிற்சி, அறிவாற்றல் பயிற்சி, கல்வி உளவியல் பயிற்சி மற்றும் குழு நடவடிக்கைகள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்தார்.

முன்னதாக உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தின விழாவில் ஆட்டிஸம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் மாவட்ட கலெக்டர் கையெழுத்திட்டார். தொடர்ந்து ஆட்டிஸம் குழந்தைகளின் இசை நிகழ்ச்சியை கலெக்டர் நேரில் பார்வையிட்டு, ஆட்டிஸம் குழந்தைகளுக்காக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி, பாராட்டு தெரிவித்தார். இதில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, ஹோப் பொது நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் நாகராணி, பேச்சு பயிற்சியாளர் சுப்புலட்சுமி, மாணவ, மாணவியர்கள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவள்ளூரில் நடந்த சிறப்பு குறைதீர் கூட்டத்தில் ஆட்டிசம் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு தின விழா: மாணவ, மாணவியர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: