காணாமல் போனதாக நாடகமாடியது அம்பலம் அதிமுக முன்னாள் கவுன்சிலர் சொத்துக்காக அடித்து கொலை: தலைமறைவான மனைவி, மைத்துனருக்கு வலை; கல்குவாரியில் சடலம் மீட்பு

சென்னை: மாங்காடு அருகே சொத்துக்காக அதிமுக முன்னாள் கவுன்சிலரை கொன்று கல்குவாரியில் சடலத்தை வீசிவிட்டு, காணாமல் போனதாக நாடகமாடிய மனைவி, அவருக்கு உடந்தையாக இருந்த மைத்துனரை போலீசார் தேடி வருகின்றனர். மாங்காடு அடுத்த கோவூர், மேற்கு மாடவீதியை சேர்ந்தவர் பாஸ்கர் (37). அதிமுக முன்னாள் கவுன்சிலர். இவரது மனைவி உஷா (34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாஸ்கர் அதே பகுதியில் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக அவரது ெதாழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வேலையின்றி வீட்டிலேயே இருந்தார். அப்போது, கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் பாஸ்கர் திடீரென மாயமானார். இதுபற்றி அவரது தாய் மோகனாம்பாள், உஷாவிடம் கேட்டபோது, வேலை விஷயமாக வெளியில் சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை, என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மகனை காணவில்லை என மாங்காடு போலீசில் மோகனாம்பாள் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாஸ்கரை தேடி வந்தனர். மேலும், இதுபற்றி விசாரிக்க அவரது மனைவி உஷாவை காவல் நிலையம் அழைத்தபோது, திடீரென அவர் மாயமானார். இதையடுத்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், கடந்த 3 நாட்களுக்கு முன் நள்ளிரவில் உஷாவும் அவரது அண்ணன் பாக்யராஜ் (38) என்பவரும் சேர்ந்து, வீட்டிலிருந்து ஒரு சாக்கு மூட்டையை கொண்டு செல்வதும், நீண்ட நேரம் கழித்து இருவரும் வெறுங்கையுடன் திரும்பி வருவதும் பதிவாகி இருந்தது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பாஸ்கர் பெயரில் ஏராளமான சொத்துக்கள் இருந்ததால், அதை அபகரிக்கும் நோக்கில் உஷா தனது அண்ணன் பாக்யராஜுடன் சேர்ந்து, கணவர் பாஸ்கரை அடித்து கொலை செய்து, நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் உடலை சாக்கு மூட்டையில் கட்டி சிக்கராயபுரம் கல்குவாரி குட்டையில் வீசிவிட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து, கல்குட்டை பகுதிக்கு போலீசார் சென்று பார்த்தனர். அங்கு ஒரு சாக்கு மூட்டையில் பாஸ்கரின் உடல் சடலமாக மிதப்பது தெரியவந்தது.

அதை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து, காணாமல் போனவர் என்ற வழக்கை, கொலை வழக்காக மாற்றி, தலைமறைவான உஷா மற்றும் அவரது அண்ணன் பாக்யராஜ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். மேலும், சொத்துக்காக உண்மையிலேயே பாஸ்கர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரித்து வருகின்றனர். சொத்துக்காக கணவனை அடித்து கொன்று, காணாமல் போனதாக மனைவி நாடகமாடிய சம்பவம் மாங்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: