ஊட்டி - கூடலூர் சாலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் நீடிப்பு

ஊட்டி: ஊட்டியில் - கூடலூர் சாலையில் தலைகுந்தா அருகே சாலையின் குறுக்கே செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் தற்போது பல்வேறு பகுதிகளிலும் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைகுந்தா அருகே முத்தநாடு கிராமத்திற்கு செல்லும் சந்திப்பு பகுதியிலும் தற்போது சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் சாலையோரத்தில் உள்ள ஒரு மின் கம்பம் சற்று சாய்ந்துள்ளது. அதேசமயம், அதற்கு எதிரே உள்ள மின் கம்பம் காமராஜ் சாகர் அணையின் கரையோரத்தில் அமைந்துள்ளது. சேறும், சகதியும் நிறைந்த சதுப்பு நிலத்தில் இந்த மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளதால், மின் கம்பம் சேற்றில் புதையுண்டுள்ளது. இதனால், சாலையின் குறுக்கே செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது.

தற்போது இவ்வழித்தடத்தில் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் செல்லும் போது, இந்த மின் கம்பிகளில் உரசி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான கேரட் அறுவடை பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், லாரிகளில் மூட்டைகளின் மேலும், கேபின்களின் மீது அமர்ந்தே செல்கின்றனர். இந்த மின் கம்பிகள் அவர்கள் மீது உரசினால் உயிரிழப்பு  ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சரக்கு வாகனங்கள் மற்றும் மரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் இந்த மின் கம்பிகள் மீது மோதும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மின் வாரியம் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும். விபத்துக்களை தவிர்க்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: