எனது போன் நம்பரை பாஜகவினர் சமூகவலைத்தளங்களில் பரப்பியதால் 500-க்கு மேற்பட்ட கொலை மிரட்டல் வந்துள்ளது... நடிகர் சித்தார்த் போலீசில் புகார்

சென்னை: எனது போன் நம்பரை தமிழக பாஜகவினர் பரப்பியதால், 500-க்கு மேற்பட்ட கொலை மிரட்டல் வந்துள்ளது என நடிகர் சித்தார்த் போலீசில் புகார் அளித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடே இல்லை என்றும், யாராவது தவறான தகவலை பரப்பினால் அவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்து இருந்தார். இதனை விமர்சிக்கும் விதமாக நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அதாவது, பொய் சொல்வது சாமானிய மனிதனோ, சாமியாரோ, தலைவரோ யாராக இருந்தாலும் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பதிவிட்டு இருந்தார். இந்த கருத்துக்கு நாடு முழுவதும் பெரும் ஆதரவும், எதிர்ப்புகளும் எழுந்தது.

இந்தநிலையில் இன்று மற்றோரு பதிவை நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது; என்னுடைய போன் நம்பரை தமிழக பாஜக-வினர் சமூகவலைத்தளங்களில் பரப்பிவிட்டுள்ளனர். அதனால் எனக்கும் எனது குடும்பத்திற்கும் 500-க்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை மிரட்டல் கால்கள் வந்துள்ளது. இதனால் காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, அவர்கள் பேசிய கால் ரெக்கார்டுகளையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளேன்” என அவர் கூறியுள்ளார்.

Related Stories: