தேனி 30வது வார்டுக்கு குடிநீர் கேட்டு சாலை மறியல்

தேனி : தேனியில் 30வது வார்டில் குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தேனி நகரில் பழைய பஸ் நிலையம் பின்புறம் 30வது வார்டு உள்ளது. இங்குள்ள கே.எல்.எஸ் தொகுப்பு தெருவில் 100க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கான குடிநீரை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நகராட்சி நிர்வாகம் விநியோகிக்க வில்லை.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் இப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு நீரை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆழ்துளை கிணறுக்கான பைப் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் நகராட்சியின் குடிநீரும் இல்லாமல், ஆள்துளைக் கிணறு தண்ணீரும் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.நேற்று இப்பகுதியை சேர்ந்தவர்கள் தேனி பழைய பஸ் நிலையம் அருகே மதுரை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது. திடீர்சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: