அழகர்கோவில் சித்திரை திருவிழா சேஷ வாகனத்தில் அழகர் புறப்பாடு: மண்டூக மகரிஷிக்கு இன்று சாப விமோசனம்

அலங்காநல்லூர்: அழகர்கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி கோயில் வளாகத்தில் நேற்று சேஷ வாகனத்தில் அழகர் புறப்பாடு நடந்தது. மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம், கோயில் வளாகத்தில் அமைத்த செயற்கை வைகையாற்றில் நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 8 மணிக்கு கோயில் உள் பிரகாரத்தில் சைத்திய உபச்சார சேவை பக்தி உலாத்தல் நிகழ்ச்சி நடந்தது. காலை 10.30 மணிக்கு சேஷ வாகனத்தில் அழகர் புறப்பாடு நடந்தது. இதிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. காலை 10 மணிக்கு கருட வாகனத்தில் அழகர் புறப்பாடாகி புராணம் வாசித்தல், மண்டூக மகரிஷி முனிவருக்கு மோட்சம் அளித்தல் ஆகிய முக்கிய நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 30ம் தேதி காலை 10 மணிக்கு புஷ்ப பல்லக்கு நடைபெறுகிறது. மே 1ம் தேதி காலை 10 மணிக்கு அர்த்த மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.  மே 2ம் தேதி காலை 10 மணிக்கு திருமஞ்சனம் உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்துடன் அழகர்கோவில் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

Related Stories: