இக்கட்டான நேரத்தில் உதவி எனக்கு நீ; உனக்கு நான்: இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி

வாஷிங்டன்: `இக்கட்டான நேரத்தில் எங்களுக்கு உதவிய இந்தியாவுக்கு, கொரோனாவுக்கு எதிரான போரில் அமெரிக்கா துணை நிற்கும்,’ என அதிபர் ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று பரவலின் 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் தினமும் பாதிக்கப்படுவதால், ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் ரெம்டெசிவிர் உள்ளிட்ட இதர மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தடுப்பூசி தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை வழங்கும்படி மத்திய அரசு அமெரிக்காவுக்கு வேண்டுகோள் விடுத்தது.

ஆனால், அவற்றை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்தது. இதற்கு உலக நாடுகள், அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. கொரோனா தொற்றின் ஆரம்ப கால கட்டத்தில், அமெரிக்கா இக்கட்டான சூழலில் இருந்த போது, இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் உள்ளிட்ட மருந்துகளை கொடுத்து உதவியதை நினைவு கூறப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவுக்கு உதவி செய்வதாக அமெரிக்கா நேற்று முன்தினம் அறிவித்தது. இது தொடர்பாக, நேற்று முன்தினம் இரவு பிரதமர் மோடியை அதிபர் பைடன் தொலைபேசியில் அ்ழைத்து பேசினார்.

இது, 45 நிமிடங்கள் நீடித்தது. அதன் பிறகு வெள்ளை மாளிகையில்  பைடன் அளித்த பேட்டி வருமாறு: பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன். கொரோனாவுக்கு எதிரான போரில் அவசரகால உதவிகள், மூல பொருட்களை வழங்குவதில் அமெரிக்கா முழு அளவில் இந்தியாவுக்கு ஆதரவளிக்கும். அமெரிக்காவின் இக்கட்டான நேரத்தில் இந்தியா உதவியாக இருந்தது. இப்போது, அவர்களுக்கு உதவியாக நாங்கள் இருப்போம். தடுப்பூசி தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் உடனடியாக வழங்கப்படும். மேலும், கொரோனா சிகிச்சைக்கு தேவையான பரிசோதனை கருவிகள், வென்டிலேட்டர்கள், பாதுாப்பு கவச உடைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களும் உடனடியாக அனுப்பி வைக்கப்படும். கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு அவசரகால உதவிகளை வழங்கி அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும், இவ்வாறு பைடன் கூறினார்.

* உலக நாடுகளுக்கு 6 கோடி தடுப்பூசி

அமெரிக்க அரசின் தலைமை மருத்துவர் விவேக் மூர்த்தி பேசுகையில், ``அமெரிக்காவில் 6 கோடி அஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இருப்பதால், அவற்றை இந்தியா உள்பட உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கானோரின் உயிர்கள் பாதுகாக்கப்படும். அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்ததும், இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்,’’ என்றார்.

Related Stories: