திமுக ஆட்சிக்கு வந்ததும் ஸ்டெர்லைட் ஆலைக்கு முழுமையாக ‘சீல்’ உற்பத்தியாகும் ஆக்சிஜன் முழுவதையும் தமிழக தேவைக்கே அளிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழகத்தின் முழு தேவைக்கு பகிர்ந்தளிக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆலையின் தற்காலிக அனுமதி முடிந்ததும் முழுமையாக சீல் வைக்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக காபந்து அரசின் சார்பில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக,  கொரோனா 2வது அலை பரவலின் வேகமும் அது ஏற்படுத்தும் விபரீத தாக்கமும் பொதுமக்களை கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியுள்ள நிலையில், மருத்துவ ஆக்சிஜனின் தேவையை உணர்ந்து, மனிதாபிமான அடிப்படையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு மட்டுமே தற்காலிக அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது.   

வேறு எந்த நோக்கத்திலும் ஆலை செயல்பட அனுமதிக்கக் கூடாது என்பதும், உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழ்நாட்டின் தேவைக்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு, அதன்பிறகே பிற மாநிலங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் முன்வைக்கப்பட்டது. ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செயல்பாட்டைத் தவிர வேறு எந்தப் பணியும் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதையும் உறுதி செய்ய தமிழக அரசு நிர்வாகத்துடன் தூத்துக்குடி பொதுமக்கள், சூழலியல் செயல்பாட்டாளர்கள், போராட்ட அமைப்பினர் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும் என்பதையும் திமுக வலியுறுத்தியது. இவற்றை தமிழக காபந்து அரசு ஏற்றுக் கொண்டது.  

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் வேறு எந்தெந்த வகையில் விரைவாக ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்ற அடிப்படையில் திருச்சி பெல் நிறுவனத்தில் முடங்கியுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை விரைந்து மறு உருவாக்கம் செய்ய வேண்டும் என திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார். மக்களின் உயிர் காக்க எந்தெந்த வகையில், தமிழ்நாட்டின் மருத்துவ தேவைக்கான ஆக்சிஜனை விரைந்து பெற முடியுமோ அதற்கான முயற்சிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது திமுக. அதன் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலையிலும் ஆக்சிஜன் மட்டுமே  தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தியது.

தமிழக அரசு மற்றும் குழுவினரின் முழு கண்காணிப்பில் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நடைபெறவேண்டும் என தீர்மானிக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், ஸ்டெர்லைட்டில் வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜனை தயாரித்து, அது மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் மத்திய அரசு மாநிலங்களின் தேவைக்கேற்ப ஆக்சிஜனை பிரித்து வழங்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக அனைத்துக் கட்சிகள் முன்வைத்த நிபந்தனையின் அடிப்படையிலான அரசின் தீர்மானத்தை உச்ச நீதிமன்றத்தில் உரிய முறையில் எடுத்துரைக்க, தமிழக காபந்து அரசு தவறிவிட்டதன் விளைவு இது.

சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், ஆக்சிஜன் தேவை இனி வரும் நாட்களில் அதிகரிக்கும். எனவே தமிழகத்தின் முழு தேவையை நிறைவேற்றிய பிறகு, மீதமுள்ள ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அளித்திடுவதே சரியான வழிமுறையாகும். ஆக்சிஜனை பங்கிடும் பொறுப்பை மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் வழங்கியிருப்பதால், பிரதமர் மோடி உடனடியாக இதில் கவனம் செலுத்தி, ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழகத்தின் முழு தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் பொறுப்பினை மேற்கொள்ள வேண்டும்.

இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் உடனடியாக தமிழக காபந்து அரசின் அதிகாரிகளுக்கும் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். பேரிடர் நேரத்தில் தமிழ்நாட்டுக்கு எவ்வகையிலும் அநீதி இழைத்திடக் கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்.

ஸ்டெர்லைட் ஆலை தற்காலிக அனுமதியுடன், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வேறு எவ்வகையான செயல்பாட்டுக்காகவும் அல்ல. திமுக அரசு அமைந்ததும், தற்காலிக அனுமதிக் காலம் முடிந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாகச் சீல் வைக்கப்படும் என்ற உறுதியினை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* நடிகர் விவேக் குடும்பத்துக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் விவேக். தனது கமெடி நடிப்பால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர். இவருக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி அன்று மரணமடைந்தார். அவருடைய மறைவுக்குப் பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலில் தனது குடும்பத்தினருடன் இருந்தார். இதனால் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனி விமானத்தில் சென்னை வந்து நடிகர் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை திரும்பிய நிலையில், நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் விவேக்கின் இல்லத்துக்குச் சென்று விவேக் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

Related Stories: