கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு மூடல்

தேனி: கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர தீவிர சிகிச்சை, அறுவை மற்றும் பிரசவம் என உள்நோயாளிகளுக்காக சுமார் 3,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர நாள் தோறும் 1,500 முதல் 2,000 பேர் வரை புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் மாதாந்திர மருந்துகள் வாங்கவும், நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்வர்.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்ப்பதற்காக புறநோயாளிகள் பிரிவு மூடப்படுவதாக அறிவிப்பை ஒட்டப்பட்டுள்ளது. இதனால் புற சிகிச்சைக்கு வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டுள்ளதால் பரபரப்பாக காட்சியளிக்கும் புறநோயாளிகள் பிரிவு வெறிச்சோடி காணப்படுகிறது. அதே நேரத்தில் பிரசவம், அறுவை உள்ளிட்ட அவசர சிகிச்சைகளுக்காக வழக்கம் போல செயல்படும் என்றும் மறுஅறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: