புதிய கட்டுப்பாடுகள் அமலானது புதுவையில் பிற்பகல் 2 மணியுடன் கடைகள் மூடல்-விதிகளை மீறியவர்களிடம் அபராதம் வசூல்

புதுச்சேரி : புதுச்சேரியில் கொரோனா தாக்கம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒரேநாளில் இறப்பு 10 ஆக உயர்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதன் காரணமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கின்போது பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வராமல் முடங்கினர். பஸ்கள், ஆட்டோ, டெம்போ ஓடாததால் சாலைகள் வெறிச்சோடியது. கோயில்களில் பூஜைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. வெளிமாநில வாகனங்கள் மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியபிறகே அனுமதிக்கப்பட்டன.

இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனாவை கட்டுப்படுத்த நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை மேலும் அதிகரித்து கவர்னர் தமிழிசை அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி புதுச்சேரியில் உள்ள தேவாலயங்கள், இந்து கோயில்கள், மசூதிகளில் பொது வழிபாடுகள் நேற்று நடைபெறவில்லை. அங்குள்ள பணியாளர்களை கொண்டே தினசரி வழிபாடுகள் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

தேவாலயங்களில் நடைபெற்ற திருப்பலிகளில் வீடுகளில் இருந்து மக்கள் பங்கேற்கும் வகையில் கேபிள் டிவி சேனல், சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதேபோல் மக்கள் அதிகம் கூடுகின்ற விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. திருமண விழாக்களில் 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இறுதி சடங்குகளில் 25 பேர்களே பங்கேற்றனர்.

வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், பொது அரங்குகள், அழகு நிலையங்கள், சலூன்கள் திறக்கப்படவில்லை. ஓட்டல், தேனீர் கடைகளில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. ஆனால் சில கடைகளில் இந்த விதிகள் மீறப்பட்ட நிலையில் வியாபாரிகளை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர்.

மேலும் புதுவையில் ஏற்கனவே நடைமுறைகளில் உள்ள கொரோனா தடுப்பு விதிகளில் கூடுதலாக மளிகை மற்றும் காய்கறி கடைகள் உள்ளிட்ட இதர அனைத்து கடைகளிலும் வழிமுறைகளை தவறாமல் கடைபிடித்து வழக்கம்போல் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தது. இதை மீறிய வியாபாரிகள், பொதுமக்களை ஆங்காங்கே காவல்துறை, நகராட்சி அதிகாரிகள் கண்காணித்து அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதேபோல் அரசு, தனியார் பஸ்களில் மக்கள் நின்று பயணிக்க அனுமதி வழங்கப்படவில்லை. மக்கள் நடமாட்டம் குறைந்ததால் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டன. கார், ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர்த்து இரு பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன.

அதேவேளையில் அரசு துறைகள் செயல்பட்டன. 50 சதவீத பணியாளர்களே வரவழைக்கப்பட்டு இருந்தனர். பெட்ரோல் பங்க்குகள் வழக்கம்போல் திறந்திருந்தன. மதுபான கடைகளும் திறக்கப்பட்டன. அனைத்து கடைகளும் மதியம் 2 மணியுடன் மூடப்பட்டன. அதன்பிறகு கடைகளை திறந்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேவேளையில் பால், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விற்பனைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.

ஆக்சிஜன் அனுப்பும் பணி தீவிரம்

புதுச்சேரியில் கொரோனா தாக்கம் அதிகரிப்பு காரணமாக சில கூடுதல் நடவடிக்கைகளை அரசு நிர்வாகம் முன்னெடுத்துள்ளது. அதன்படி சிவப்பு கட்டுப்பாட்டு மண்டலங்களில் சிறப்பு முகாம்கள் மூலமாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கதிர்காமம், ஜிப்மர் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அங்கு படுக்கை வசதிகள் ேமலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கொரோனா முன்கள பணியாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் வெளியே வருவதை தடுக்க ஆஷா பணியாளர்கள் மூலமாக மருத்துவ மற்றும் இதர உதவிகள் அளிக்கப்படுகிறது.

Related Stories: