ஆடி வீதியில் தேரோட்டம்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்றுடன் நிறைவு

மதுரை: சித்திரை திருவிழாவையொட்டி பக்தர்கள் பங்கேற்பின்றி ஆடி வீதியில் அழகிய தேர்களில் சுந்தரேஸ்வரர், பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மன் பவனி வந்தனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், திக்கு விஜயம், 10ம் நாளான நேற்று முன்தினம் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. 11ம் நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது.

நேற்று காலை கோயில் வளாகத்தில் கிழக்கு கோபுர ஆடி வீதியில் புதியதாக அமைக்கப்பட்ட தேரடிக்கு அம்மன், சுவாமி, பிரியாவிடை சென்றனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் ஒரு தேரிலும், பிாியாவிடை, சுந்தரேஸ்வரர் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர்.

கோயில் ஊழியர்கள் மற்றும் போலீசார் வடம் பிடித்து இழுக்க, ஆடி வீதிகளில் தேர்கள் அசைந்தாடி வலம் வந்தன. இரவு 7 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் மீண்டும் ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.இன்று (ஏப். 26) கோயிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் தீர்த்தம், தேவேந்திர பூஜை நடைபெறுகிறது. இதில் அம்மன், பிரியாவிடை, சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். இத்துடன் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

Related Stories: