திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்-கடைகள் முழு அடைப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி நேற்று கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. திண்டுக்கல் நகரில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

திருமண மண்டபங்களில் நடந்த திருமணத்தில் குறைவான நபர்களே மாஸ்க் அணிந்து வந்தனர். திண்டுக்கல் நகரில் உள்ள மெயின் ரோடு, பழநி ரோடு, திருச்சி ரோடு, பெரிய கடை வீதி ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர். இதனால் நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. தேவையில்லாமல் வெளியே வந்தவர்களை காவல்துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.   

பட்டிவீரன்பட்டி:

பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், எம்.வாடிப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் முழுஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஊரடங்கு விதிகளை மீறி சித்தரேவு, சாலைப்புதூர், அய்யம்பாளையத்தில் கடைகளை திறந்திருந்ததாக 10 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. அத்தியாவசிய  தேவையான பால்கடை, மருந்துகடைகள் மட்டும் திறந்திருந்தன. சித்தரேவு கிராமத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை நடைபெற்று வந்த வாரச்சந்தை நேற்று முன்தினம் சனிக்கிழமையன்று நடந்தது.  

நத்தம், சின்னாளபட்டி:

நத்தம் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.  சின்னாளபட்டியில் திண்டுக்கல்-மதுரை தேசிய நான்குவழிச்சாலையில் வாகன போக்குவரத்தோ, மனிதர்கள் நடமாட்டமோ இல்லாமல் வெறிச்சோடியது. எப்போதும் அதிக வாகனங்கள் செல்லும் மதுரை-திண்டுக்கல் புறவழிச்சாலை தோமையார்புரம் ரவுண்டானா பகுதி வெறிச்சோடியது. இதுபோல சின்னாளபட்டி மேம்பாலம் அருகே ஊருக்குள் செல்லும் சாலைப்பகுதி போக்குவரத்தின்றி முடங்கியது.

குஜிலியம்பாறை:

குஜிலியம்பாறையில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டது. முழு ஊடரங்கின்போது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால், நகரில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் பாளையம், வெள்ளப்பாறை, டி.கூடலூர், புளியம்பட்டி, கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதி முழுவதும் மக்கள் நடமட்டம் இன்றி வெறிச்சோடியது.

கொடைக்கானல்:

முழு ஊரடங்கான நேற்று கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் இல்லாமலும், பொதுமக்கள் இல்லாமலும் வெறிச்சோடியது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் நகர் பகுதி பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட், காமராஜர் மார்க்கெட், செக்போஸ்ட், தாராபுரம் சாலை, திண்டுக்கல் பழநி சாலை நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. எப்பொழுதும் பரபரப்பாக இயங்கிவரும் ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்,  காமராஜர் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.  அத்தியாவசிய தேவையின்றி இருசக்கர வாகனத்தில் சுற்றி வந்தவர்களை பேருந்து நிலையம், காவல் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசார் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பினர்.

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு மதுரை, திண்டுக்கல், தேனி ,கொடைக்கானல் ஆகிய முக்கிய நகரங்களுக்கு மையத்தில் அமைந்திருப்பதால், வத்தலக்குண்டு பஸ் நிலையத்துக்கு 200க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் நிலையம் எப்போதும் நெரிசலாக கலகலப்பாக காணப்படும். நேற்று ஊரடங்கையொட்டி பஸ் நிலையம் ஆட்களே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல எப்போதும் போக்குவரத்து நெரிசல் உள்ள வத்தலகுண்டு மதுரை சாலை,திண்டுக்கல் சாலை, பெரியகுளம் சாலை ஆகியவை ஆட்களே இல்லாமல் காணப்பட்டது.

Related Stories: