கொரோனா முழு ஊரடங்கையொட்டி தஞ்சையில் சாலைகள் வெறிச்சோடியது-கடைகள் அடைக்கப்பட்டிருந்தன

தஞ்சை : தஞ்சை மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கையொட்டி சாலைகள் வெறிச்சோடியது. கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் இத்தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு நாளுக்கு நாள் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து அமல்படுத்த தொடங்கியுள்ளது.

இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு அடைப்பை அரசு அறிவித்துள்ளது.இதையடுத்து நேற்று தஞ்சை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலானது. காய்கறி கடைகள், மளிகை கடைகள், சிறிய ஓட்டல்கள் முதல் பெரிய ஓட்டல்கள் என அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் முழுவதும் மூடப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் சுமார் 45 ஆயிரம் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு 10 மணி முதலே தஞ்சை மாவட்டம் முழுவதும் வெறிச்சோடியது. நேற்று காலையும் இந்த ஊரடங்கு தொடர்ந்தது. வழக்கமாக ஞாயிற்றுகிழமை என்பதால் மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட், இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதும். ஆனால் இக்கடைகளில் நேற்று முன்தினமே மக்கள் கூட்டமாக கூடி தேவையான இறைச்சி, மீன் உள்ளிட்டவைகளை வாங்கி இருப்பில் வைத்துக் கொண்டனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் பேருந்துகள், லாரிகள், கார்கள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோ ஓடவில்லை. இதனால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. தஞ்சை புதிய பேருந்து நிலையம், தற்காலிக பேருந்து நிலையங்கள் பேருந்துகள், பயணிகள் இன்றி காணப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. ஒன்று இரண்டு இருசக்கர வாகனங்கள், கார்கள் சென்றன. இவற்றை போலீசார் வழிமறித்து வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி திருப்பி அனுப்பினர்.

தஞ்சை கீழவாசல், அண்ணா சாலை, மாமாசாகிப்மூலை போன்ற பகுதிகளில் இருசக்கர வாகனங்கள், கார்கள் செல்வதை முற்றிலுமாக நிறுத்த போலீசார் வலியுறுத்தினார். அத்தியாவசியமாக செல்ல வேண்டியவர்களான மருத்துவமனை பணியாளர்கள், மருந்து எடுத்து செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ், பத்திரிகையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். முழு ஊரடங்கையொட்டி அண்ணா சிலை, கீழவாசல் போன்ற பகுதிகளில் சாலைகளில் முழுவமையாக தடுப்புகளை கொண்டு அடைக்கப்பட்டது. போலீசாரின் கண்டிப்பால் சாலைகளில் தேவையின்றி சுற்றி திரிந்தவர்கள் மதியம் முதல் குறைவாக காணப்பட்டனர்.

Related Stories: